பரிமாணம் -Editorial 30.01.2023
13 படும் பாடு

நாட்டில் என்னென்னவெல்லாம் நடக்கிறது…, ஒரு பொழுதை கழிப்பதே வேதனையாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில், வறட்டுத்தனமான அரசியலைப் பேசி அழிந்த நாட்டை மேலும் பேரழிவுக்குள் சிக்க வைக்கும் முயற்சிகள் தான் தொடர்கின்றன.
பொருளாதார மீட்சிக்கு கடன் கேட்டால், சர்வதேச நாணய நிதியமும் இழுத்தடிக்கிறது. அதேபோல, உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றை நடத்துவதில் இன்னும் இழுபறி…
வாழ்வியலை தொலைத்து நிற்கின்ற இந்த நாட்டில், அரசியல்வாதிகளும், அரசியல் தலைமைகளும் நிமிர்த்த முடியாத வால் போல் செயல்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில், இன்று முக்கிய பேசுபொருள் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம்.
13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பது தமிழ் கட்சிகளின் ஏகோபித்த முடிவு. ஆயுதப் போராட்டம் ஒன்று மௌனிக்கப்பட்ட நிலையில், இதையாவது கேட்போம் என்பதுதான் அனைத்து தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு.

பதிமூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்று, இந்தியாவின் உதவியையும் தமிழ் கட்சிகள் நாடி இருக்கின்றன.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர், இதற்கு வெளிப்படையாகவே பச்சைக் கொடி காட்டி விட்டுச் சென்றார்.
இந்த நிலையில், தென்பகுதி அரசியலில் ஏற்பட்டிருக்கும் ஏட்டிக்கு போட்டியான அரசியலால், 13க்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் நாடு
பிளவடைவதை தவிர்க்க முடியாது என, விமல் வீர வன்ச, உதயகம்மன் பில, சரத் வீரசேகர, அத்துரெலிய ரத்ன தேரர் உட்பட பெரும்பாலான மொட்டு கட்சி அங்கத்தவர்களும் இந்தக் கோஷங்களை பரப்பி வருகிறார்கள்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சர்வ கட்சி கூட்டத்திலும் 13க்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படையாகவே பேசப்பட்டன.

13ஐ அமுல்படுத்துவதில் ஓரளவு ஆர்வம் காட்டி வருபவர் இந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. கடைசியாக நடந்த சர்வ கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி தன்னையே இழந்து விட்டார்.

“அரசியலமைப்புக்கான பதிமூன்றாவது திருத்தம் என்பது மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்கும் ஒரு சட்டத் திருத்தம். அரசியலமைப்பில் உள்ள ஒரு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு நீங்கள் விரும்பவில்லை என்றால், அரசியலமைப்பிலிருந்து 13 ஐ நீக்குங்கள்.

அதற்காக, அரசியலமைப்புக்கு இன்னும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து அதை இல்லாமல் செய்ய முடியும்.” என ஆவேசமாக தெரிவித்தார்.

உண்மையில், பதிமூன்றாவது திருத்தம் என்பது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரசவம் என்று சொல்லலாம். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவும், இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதி ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்டது.

இதன் பின்பு உருவாக்கப்பட்ட இந்த திருத்தம், இலங்கையில் ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்கும் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குகிறது. அதிகாரங்களை பரவலாக்குகின்ற ஒரே ஒரு சட்ட அங்கீகாரமும் 13வது திருத்தம் ஆகும்.

13 ஐ அமுல்படுத்துவதனால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிடும் என்று தமிழர்களும் கருதவில்லை; தமிழ் கட்சிகளும் சொல்லவில்லை.

அரசியல் ரீதியாக பலம் இழந்த நிலையில் இருக்கின்ற தமிழர்கள், கோவணத்தையாவது கொஞ்சம் மறைக்கலாம் என நினைக்கிறார்கள். அதனையும் உருவி எடுக்கலாம் என்று தான் தென் பகுதி அரசியல் சக்திகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

ஜனாதிபதி ரணிலின் ஆவேசத்தில் நியாயம் இருக்கிறது.” நீங்கள் லேசாக எதிர்த்து விட்டு சென்று விடுவீர்கள். சர்வதேசத்துக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான்….. ” இப்படி ஜனாதிபதி அடித்துக் கூறினார்.

13ஐ அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா கொடுக்கும் அழுத்தம் கனதியானது. .

நாடு பிரியும் என்ற நிலை இருக்குமாக இருந்தால், இந்தியா இதில் மூச்சுக் கூட விடாது.. இந்திய நலனுக்கு பாதிப்பு ஏற்படாமல் உருவாக்கப்பட்டதே இந்த 13 வது திருத்தம் என்பதை இதுவரை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழர் பிரச்சனையை வைத்துக்கொண்டு இனவாதத்தோடு குளிர் காய்ந்தால் நாட்டின் சுபிட்சம் என்பது எட்டாக் கனியாகிவிடும்.

You missed