(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் கொட்டும் மழையில் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட மற்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி பிரகடனப்படுத்தப்பட்ட ‘கறுப்பு ஜனவரி’ தினமான இன்று வெள்ளிக்கிழமை (27) நீதிகோரி காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் கறுப்புபட்டி போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு ஜனவரி மாதம், இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது.

பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்பவற்றுக்கு நீதி கோரி, வருடம் தோறும் ஜனவரி மாதத்தை ‘கறுப்பு ஜனவரி’யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில்ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் சுமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரப்பட்டதையடுத்து தொடர்ந்து கறுப்பு சீலை வாயில் அணிந்துகொண்டு அரசாங்கமே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதி, ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து, படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடு, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துபோன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அமைதியான முறையிலான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து போராட்டக்காரர்கள் விலகிச் சென்றனர்.