முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அது முற்றிலும் பொய்யானது என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

குடும்பத்துடன் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச, புதல்வர் மனோஜ் ராஜபக்ச, மருமகள் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகள் துபாய் நாட்டுக்கே சென்றுள்ளனர்.

துபாய் நாட்டில் சில நாட்கள் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச உட்பட குடும்பத்தினர் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுமுறைக்காக கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்று சில நாட்கள் தங்கியிருக்க உள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச, அவருக்கு எதிரான மக்கள் போராட்டம் காரணமாக நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.

முதலில் மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்று, சிங்கப்பூரில் இருந்து ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த காலத்தில் அமெரிக்காவுக்கு செல்ல விசா அனுமதியை பெற பல முறை முயற்சித்த போதிலும் அவருக்கு அமெரிக்காவுக்கான விசா கிடைக்கவில்லை.

இதனையடுத்து தாய்லாந்து சென்ற கோட்டாபய, அங்கு தங்கியிருந்த நிலையில், இலங்கைக்கு திரும்பி வந்தார்.