கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தம்மோடு இணைந்து பணியாற்ற சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைப்பும் விடுத்துள்ளார்.

குறித்த 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று கனேடியத் தமிழர் பேரவையினால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் தாம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.