பொத்துவில் கனகர் கிராம மக்கள் சொந்த நிலங்களில் குடியேற விடாது இழுத்தடிப்பு

*த.தே.கூ. அம்பாறை மாவட்ட முன்னாள் எம்பி சந்திரகாந்தன் கடும் கண்டனம்

(கனகராசா சரவணன்)

அம்பாறை மாவட்டம் பொதுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பி. 25 கனகர் கிராம மக்கள் கடந்தகால யுத்தத்தினால் தமது பூர்வீக சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய நிலையில் அவர்கள் மீண்டு; சொந்த நிலங்களில் குடியேற  அரசாங்கத்தினால் தீர்வுவழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டபோதும்  சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தங்களது சுய இலாபங்களினால் அவர்களை இன்று வரை மீள குடியமர்த்தாது இழுத்தடிப்பு செய்து வருகின்றமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கண்டனம் தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பொத்துவில் பி- 25கனகர் கிராமமக்கள் 1970 க்கு முன்னர் பொத்துவில் 60 கட்டை கிராமத்தில் சேனை பயிர்செய்கைக்காக குடியேறியிருந்ததோடு நாளடைவில் அரசாங்கத்தினால் அந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரமும் வழங்கப் பட்டிருந்தது. சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் தமது ஜீவனோபாய தொழிலாக சேனைப்பயிர்செய்கையை மேற்கொண்டு வந்தனர்

இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் முதல் கொண்டு இறப்பு அத்தாட்சிப் பத்திரம் தேசிய அடையாள அட்டை வாக்காளர்பதிவு புனர்வாழ்வு பத்திரம் என உறுதிப்படுத்தப்பட்ட குடியுரிமை அத்தாட்சிப்பத்திரங்களுடன் வாழ்ந்த மக்கள் 1990  இடம்பெற்ற யுத்தத்தினால்  இடம்பெயர்ந்து இன்று தமது பூர்வீக வாழ்விடங்களை தொலைத்து நிற்கின்றனர். 

1981 ம் ஆண்டில் அப்போதைய பொத்துவில் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சரும் எனது மாமாவுமாகிய மறைந்த எம்.சி கனகரெட்ணம்; இப்பிரதேசம் அரச வர்த்த மாணியில் பதிவு செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அரச வர்த்தமானியின் அறிவித்தலோடு அவர்நின்றுவிடாது தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக கடனடிப்படையில் 30 வீடுகள்வழங்கப்பட்டு தமது எண்ணக்கருவில் உதயமானதால் கனகர்கிராமம் என பெயர்சூட்டியிருந்தார்.

1990 இடம்பெயர்வில் 200 க்கு மேற்பட்டகுடும்பங்கள் மாத்திரமல்லாது 30 வீட்டுத்திட்டத்தில் இருந்த மக்களும் முற்றுமுழுதாகவெளியேறியிருந்தமை யாவரும் அறிந்ததே ஆனால் இன்று தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமத்தில் குடியேறுவதற்காக அந்த மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை 30 வீட்டுத்திட்டத்துக்குள் அடங்கிய போராட்டமாக சில விசமிகளால் திட்டமிட்டு திசைதிருப்பட்டிருப்பதை அண்மைய செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது. 

எமது மக்களின்பூர்வீக நிலங்களுக்கான நியாயமான போராட்டங்களை மறுதலிக்கவோ அல்லது தூர்ந்துபோக செய்ய முன்னெடுக்கும் செயற்பாடுளை முன்னெடுக்க முடியாது அவ்வாறானசெயற்பாடுளை வன்மையாக கண்டிக்கின்றேன். 

தாம் பூர்வீகமாக வாழ்ந்த கனகர் கிராமம் 3தசாப்தத்தின் பின்னர் பற்றை காடுகளாக காட்சியளிக்கின்றன தாம் திருமணம் முடித்து அங்கு பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் இன்று வயதானவர்களாக தாம் வாழ்ந்த இருப்பிடங்களை தொலைத்து நிற்கின்றனர தமது இறுதிக்காலத்திலேனும் தமது நிலங்களில் குடியேறி தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையாவது சிறப்பிக்கவும்.

தமது இறுதிக்காலத்தில் தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து நிம்மதியடையவும் எதிர்பார்த்து இன்று வரை வெயிலிலும் மழையிலும்; தமது சொந்த நிலங்களில் குடியேற்றுமாறு கோரி கடந்த 12 வருடங்களாக தமது நியாயமான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

இதற்காக பிரதேச செயலகம் முதல் மாவட்ட காரியாலயம் ஆளுனர் செயலம் ஜனாதிபதி செயலகமென பல்வேறு மட்டத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் மூலம் அந்த மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கக்கோரி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

எனவே சுய அரசியலுக்காக அவர்களது நியாயமான போராட்டங்களை திசைதிருப்ப வேண்டாம். 30 வருடங்களுக்கு முன்னர் சேனை பயிர்செய்கைக்காக விவசாயத்தை மேற்கொண்ட 200க்குமேற்பட்ட குடும்பங்கள் யுத்தம் காரணமாக உயிருக்கு பயந்து இடம்பெயர்ந்து செல்கின்ற நிலமைக்கு தள்ளப்பட்டமை யார் தவறாகும்?

இவர்கள் குடியேறதனால் காடுபடர்ந்ததால் குடியுரிமைக்கு சொந்தமான நிலங்கள் வன இலாகாவுக்கு எவ்வாறு சொந்தமாகும். அவ்வாறு சொந்தமாயின் கனகர் கிராமமக்களுக்கு சொந்தமான கடற்கரையில் இருந்து 100 ஏக்கர் இன்று தனியார் வசமாகியது எவ்வாறு.? தமதுசொந்த நிலத்துக்குள் செல்லமுடியாதவாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாலும் வனபரிபாலதிணைக்கள அதிகாரிகளாலும் தடைவிதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கதக்கதும் வேதனைப்பட வேண்டிய விடயமுமாகும்.

நாட்டில் இன ஐக்கியமும் நல்லுறவு ஏற்பட வேண்டுமெனில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அடிமட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் யுத்தம் முடிவுற்று 13வருடங்கள் கடந்து விட்ட நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வடகிழக்கில் ஆங்காங்கே குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட கனகர் கிராமமக்கள் இன்னும் குடியமர்த்தப்படாமல் இருப்பது ஏன்? 

அன்று கனகர் கிராம மக்கள் யுத்த சூழலில் இடம்பெயர்ந்தாலும் இன்று வரை வறுமை சூழலிலே நமது ஜீவனோயாயத்தை நடாத்திவருகின்றனர் .இவர்களது வாழ்கைத்தரம் உயர வேண்டுமானால் இவர்களது வாழ்விடங்கள  உறுதிப்படுத்தப்பட்டு மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

You missed