(அஸ்லம் எஸ்.மௌலானா)

உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.- LDSP) கீழ், அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பதற்கான ஆலோசனைப் பட்டறையொன்று கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (10) கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் மற்றும் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இப்பட்டறையில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.பி.மௌலானா, என்.எம்.சாஹிர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இப்பட்டறையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ஏ.ஆர்.செலஸ்டினா, சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், சுபைல் அஸீஸ், ஏ.எம்.சித்தி நஸ்ரின் மற்றும் மாநகர சபையின் பிரிவுத் தலைவர்களுடன் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்கள், இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியக் காரியாலயம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சில முக்கிய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் பொதுவான விரிவுரைகள் மற்றும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் குழுக் கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெறவுள்ள நிதியைக் கொண்டு, முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்களை, பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை மையப்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்துவதை நோக்காகக் கொண்டு, முழுநாள் செயலமர்வாக இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனைப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளராக கல்முனை மாநகர சபையின் உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌஷாத் பணியாற்றியிருந்தார்.

You missed