நூருல் ஹுதா உமர்

கல்முனை கடலிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் 12 நாட்களாகியும் கரை திரும்பவில்லை.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கல்முனை மீனவ சங்க கட்டிடத்தில் வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் கூட்டுறவு சங்க ஏற்பாட்டில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. கல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த 26.09.2022ம் திகதியன்று மாலை ஏ.எல்.எம். உவைஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற மீனவர்களான கல்முனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி கபீர் (வயது 50), எம்.என்.

ஹில்மி (வயது 33) ஆகிய மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். இவர்கள் காணாமல் போன தினத்திலிருந்து மீனவ சங்கங்கள், கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 12 தினங்களாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களை கடந்த 28ம் திகதி மாலை 05 மணியளவில் வாழைச்சேனை பிரதேச கடலில் வைத்து மீன்பிடி படகொன்று கண்டுள்ளது. அவர்களின் பயணப்பாதையை நோக்கும் போது வடமாகாண கடலில் அந்த மீனவர்கள் தத்தளிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். வடமாகாண மீனவ சங்கங்களும், மீனவர்களும் இவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என இயந்திரப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் தெரிவித்தார். எங்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிகின்றோம். மேற்குறித்த மீனவர்கள் காணாமற் போன விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்ததையடுத்து தேடுதல் நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்று வருகிறது. மேலும் இவ்விடயத்தில் சிரத்தையெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை காணாமல் போனவர்களின் குடும்பத்தின் சார்பில் இங்கு கருத்து தெரிவித்த அவர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

இங்கு கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்; கடற்படை, பொலிஸ், கடற்தொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலையே தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். ஊடகங்களில் குறித்த ஊடகவியலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதியுள்ளார். இங்கிருக்கும் எல்லோருக்கும் உண்மைநிலை தெரியும்.

இந்திய ராமேஸ்வரத்தில் உள்ளவர் அவர்களை தொடர்புகொண்டதாக அறிந்து அவரை நாங்கள் தொடர்புகொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டுள்ளோம். அவர்களின் தொலைபேசி செயற்பாட்டில் உள்ளது.

ஆனால் அவர்களுடன் பேச முடியாதுள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீட்க சகல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறோம். இறைவனின் உதவியுடன் அவர்களை மீட்போம் என நம்பிக்கை வெளியிட்டார்.