இலங்கை மத்திய வங்கியின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வசதியும் இதில் உள்ளடங்குவதாகவும் மத்திய வங்கி கூறுகிறது. அதன்படி, 400 மில்லியன் டொலர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

செப்டெம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானம்

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்தில் மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வழக்கமான வைப்பு வசதி விகிதத்தின் தற்போதைய நிலை மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் ஆகியவற்றை பராமரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.