இலங்கையின் கடன் மறுசீரமைக்க கடன் உரிமையாளர்களுடனான முதன்மையான பொறுப்பை நிறைவேற்ற ஜப்பான் அரசாங்கம் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷி (Yoshimasa Hayashi) , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று முற்பகல் டோக்கியோவில் நடைபெற்றது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரிடம் வருத்தம் வெளியிட்ட ஜனாதிபதி

இதன் போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தை சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கம், ஜப்பானின் சில முதலீடுகளை இரத்துச் செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கை, ஜப்பான் இடையிலான உறவுகள் தொடர்பில் வருதத்தை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் இரத்துச் செய்யப்பட்ட இலங்கைக்கு மிகவும் அத்தியவசியமான அந்த திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை சர்வதேச விவகாரங்களில் ஜப்பான் வழங்கி வரும் ஆதரவை பாராட்டியுள்ள ஜனதிபதி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்தை வரவேற்றுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், உலக அரங்கில் ஆசியாவின் பிரதிநிதித்துவம் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் முதலீட்டு சந்தர்ப்பங்களை ஆராய ஜப்பான் விருப்பத்துடன் உள்ளது.

இதனிடையே இலங்கையில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி துறையில் ஜப்பானின் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஜப்பான் இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஜப்பான் இலங்கையில் எதிர்கால முதலீட்டு சந்தர்ப்பங்களை ஆராய விருப்பத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பயிற்சிகளை பெற்ற தொழிலாளர்களுக்காக அதிகமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக நடவடிக்கைகளை ஜப்பான் ஆரம்பித்துள்ளது எனவும் யோஷிமாஷா ஹயாஷி மேலும் தெரிவித்துள்ளார்.