எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 350 முதல் 400 பௌசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எரிபொருள் வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.