நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கொட்டாவ, ருக்மலே, தர்ம விஜயலோக ஆலயத்திற்கு சனிக்கிழமை (06) விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, பின்னர் ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்கத்தின் தலைவர் வண. இத்தேபனே தம்மாலங்கார நஹிமி அவரது ஆசியைப் பெற்றார்.

தேரர்களிடம் பேசிய ஜனாதிபதி, தேரர் வழங்கிய ஆலோசனையினால் தான் ஜனாதிபதியாக வர முடிந்ததாக தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியும் என நம்புவதால், அனைத்துக் கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறினார்.

“நாம் நம்மைப் பிரித்துக் கொண்டால், அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ இழக்காது, ஆனால் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் இழக்க நேரிடும்” என்று கூறிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கடைசி வாய்ப்பு இது என்று வலியுறுத்தினார்.

முதலாவதாக, நாட்டு மக்களை தற்போதைய நிலையில் இருந்து மீட்டெடுப்பதும், ஒட்டுமொத்தமாக சிறந்த சமூகத்தை உருவாக்குவதும் முக்கியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டை ஒன்றிணைப்பதற்கான தனது அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதாக மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி விக்ரமசிங்க, “தவறான பாதையில் சென்ற சிலருக்கு” ​​அனுதாபம் தெரிவிப்பதோடு, அவர்களுடன் இணைந்து தனது பயணத்தையும் தொடர நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த பாதையில் நாம் தொடர்ந்தால், ஒன்றரை தசாப்தங்களில் சிறந்த மற்றும் பலமான இலங்கையை உருவாக்க முடியும் என்பதே எனது நம்பிக்கை என ஜனாதிபதி தெரிவித்தார்.