பாறுக் ஷிஹான்

மஹிந்தவின்   பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருகின்றார் என    தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ  சுமந்திரன்  தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியும்  சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்    கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது 

நாட்டில் என்ன நடக்கின்றது என்பது மக்களுக்கு தெரியும்.நாட்டில் போராட்டம் ஆரம்பமாகிய போது ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கூறியதாக  திரு சாணக்கியனுக்கும் எனக்கும் ஒரு செய்தி வந்தது.அவர் என்ன கூறினார்.அதாவது இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒரு திட்டம் உள்ளதாக எமக்கு தெரிவித்தார்.அந்த திட்டமானது ரணில் விக்கிரமசிங்கவிடம் பதவியை வழங்குவோம்.அவர் அதை பத்திரமாக வைத்திருந்து எம்மிடம் திருப்பி தருவார்.இந்த விடயம் மஹிந்த ராஜபக்ஸ இராஜநாமா செய்வதற்கு 3 கிழமைக்குள் எமக்கு கிடைத்த தகவல் ஆகும்.சாணக்கியனுக்கு தான் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.சாணக்கியனே எனக்கு சொன்னார்.அவருக்கு (சாணக்கியன்) அந்த பக்கத்தில் இன்னும் தொடர்புகள் இருக்கின்றது.அத்தொடர்பு நன்மைக்காகவே இருக்கின்றது.இவ்விடயங்கள் குறித்து எமது கட்சி கூட்டத்திலும் நான் தெரிவித்துள்ளேன் என்றார்.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்,  தவராசா கலையரசன்   உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில்  பங்குபற்றியதுடன்  சமகால அரசியல் போக்கு  8வது ஜனாதிபதி தெரிவும் கூட்டமைப்பின் வாக்களிப்பு தீர்மானம் பற்றிய தெளிவு படுத்தல்களை வழங்கினர்.