நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதேவேளை, அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.