முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.!
(அஸ்லம் எஸ்.மௌலானா)
முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் வேலை பார்ப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற அரசாங்கம் முன்வர வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இழைக்கப்பட்ட அநீதி குறித்து அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் :
அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் (சூரி, மதனி), செயலாளர் அஷ்ஷெய்க்
ஏ.எல். நாஸிர் கனி (ஹாமி) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் தாதிய உதவியாளர்களை அவர்கள் ஹிஜாப் அணிந்த காரணத்தால் அவர்களது பணியை செய்யவிடாது இடையூறு விளைவித்தமை, அவர்களுக்கு இடமாற்றம் கொடுத்து மன உளச்சலை ஏற்படுத்தியமை மனிதாபிமானத்துக்கும் மனித நாகரிகத்துக்கும் உட்பட்ட செயலாக பார்க்கப்படமாட்டாது.
உண்மையில், புதிதாக நியமனம் பெற்று வருபவர்களை வாழ்த்தி வரவேற்பதே மானுட தர்மமாகும். அதை விடுத்து தாதிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண்களை தொழில் ரீதியான சீருடைக்கு மேலதிகமாக, அவர்களது சமய நெறிமுறைகளைத் தழுவிய ஒழுக்கமானதும் கௌரவமானதுமான ஆடையை அணிந்ததற்காக ஆவமானப்படுத்தி இடமாற்றம் செய்தமை சகவாழ்வுக்கு இடையூறு விளைவிக்கின்ற வன்மத்தை வெளிப்படுத்தும் செயற்பாடாகும்.
ஒவ்வொருவரும் தத்தமது சமய, கலாசார தனித்துவங்களை பிரதிபலிக்கும் விதமாகவே தொழில் செய்யும் இடங்களிலும் வெளியிலும் வாழ்கின்றனர். அது அவர்களது உணர்வும் உரிமையுமாகும். இவ்விடயத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் வைத்துப் பார்ப்பது அவர்களது அடிப்படை உரிமையை மீறும் செயல் மட்டுமல்பாமல் இன விரிசலை ஏற்படுத்த தூபமிடும் வன்முறை நடவடிக்கையுமாகும்.
முஸ்லிம் பெண்களின் ஆடை உரிமைக்காக குரல் கொடுத்த முஸ்லிம் , தமிழ், சிங்கள பாரளுமன்ற உறுபிபினர்களை அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா பெரிதும் மதிப்பதுடன் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக தனது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இது விடயத்தில் கரிசனை காட்டிய சட்டத்தரணிகள். கல்விமான்கள், புத்திஜீவிகள் பாராட்டுக்குரியவர்கள்.
மேலும், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் முஸ்லிம் பெண்களின் ஆடை உரிமைக்காக முன்னொரு போதும் இல்லாத அளவு அநேக தமிழ் சகோதர, சகோதரிகள் குரல் கொடுத்திருந்தார்கள். நீதி, நியாயத்துக்காக சமயம், இனம் தாண்டிய மகத்தான இப்பணிதான் இன்று சமூகங்களுக்கு மத்தியில் தேவைப்படுகின்றது.
இன்றுள்ள இன, மத, மொழி பாரபட்சம் பாராத அரசாங்கம், முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் வேலை பார்ப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற முன்வர வேண்டும் என எமது சபை கோரிக்கை விடுக்கின்றது.
இதன் மூலம் அரசாங்கத்தின் கீழுள்ள பல்வேறு துறைகளிலும் இணைந்து, முஸ்லிம் பெண்கள் விருப்பத்துடனும் ஆர்வத்துட்டனும் தங்கள் பங்களிப்பை நாட்டுக்கு வழங்க முன்வருவார்கள்- அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா குறிப்பிட்டுள்ளது.
Aslam S.Moulana
Journalist
