கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 1994/95 கல்வியாண்டைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள், பல்கலைக்கழகத்தில் இணைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரமாண்டமான ஒன்று கூடல் நிகழ்வை அண்மையில் மயிலம்பாவெளி Chill Hutz ஹோட்டலில் சிறப்பாக நடத்தினர்.
1996 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடங்கி, 2000 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய இப்பட்டதாரிகள், சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் மீண்டும் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினர்.
அவர்களின் நிதிப் பங்களிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் வருமாறு:
மாவடிவேம்பு பிராந்திய உளவள புனர்வாழ்வு நிலையத்தின் (Mental Health Rehabilitation Centre) உணவகத்தை மேம்படுத்த ரூ.250,000 பெறுமதியான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இலுப்படிச்சேனை அம்மாள் மகா வித்தியாலயத்திற்கு ரூ.350,000 பெறுமதியான நவீன புகைப்பட நகலெடுக்கும் (Photocopier) இயந்திரம் வழங்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கு (International Research Conference) ரூ.100,000 நிதி அனுசரணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி திரு. ந. ராஜேஷ்வரன் தலைமையில், 1994/95 கல்வியாண்டு பட்டதாரிகளுக்கும் அவர்களுக்கு கல்வி கற்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மற்றும் அனுபவப் பகிர்வு நிகழ்வும் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் கலந்து கொண்டார். மேலும், முன்னாள் பீடாதிபதி திரு. எண். யோகேஸ்வரன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த சந்திப்பின் போது, பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தில் பெற்ற கல்வி ,தங்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொழில் மற்றும் சமூக வாழ்வில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்பதைப் பகிர்ந்து கொண்டனர். அத்துடன், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனைகள், சிறந்த நடைமுறைகள் (Best Practices) மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்து, தங்களை உருவாக்கிய பல்கலைக்கழகத்திற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
நிகழ்வைத் தொடர்ந்து, தாங்கள் கல்வி கற்ற பல்கலைக்கழக வளாகத்தின் பல பகுதிகளையும், மாணவர் விடுதிகளையும் நேரில் பார்வையிட்டு, மாணவப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தனர்.
இந்நிகழ்வில், தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து தொழில்புரியும் 1994/95 கல்வியாண்டு பட்டதாரிகளும், இலங்கையின் பல பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்களும் நேரடியாகக் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்த பலர் இணையவழி (Online) மூலமும் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும், தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபனும் இதே 1994/95 கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்றவர் என்பதும் இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்தது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மீள்சந்திப்பு, பழைய நட்புகளை மீண்டும் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வையும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய அர்த்தமிக்க நிகழ்வாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
















