(வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை மாநகரிலும் இதர தமிழ் பிரதேசங்களிலும் சில அதிகாரிகளால் அநீதி, பாரபட்சம் தொடர்ந்து காட்டப்படுகிறது.

இதனை இந்த அரசாங்கத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று  கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் , சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜன் கொழும்பு சென்று உயரதிகாரிகள் அமைச்சர் முதல் ஜனாதிபதி செயலகம் வரை சென்று முறைப்பாடுகளை உரிய ஆவணங்களுடன் நேற்று கையளித்தார்.

கல்முனை மாநகரில் மதகு மற்றும் ஒட்டுமொத்த வெள்ள நீர் வழிந்தோடும் வடிகானுக்கு மேலாக  சட்டவிரோதமாக கடை அமைக்கும் வேலை சூட்சுமமாக  இடம்பெற்று வந்திருக்கிறது.ஏலவேயும் சில இடங்களில் இவ்வாறு இடம்பெற்றிருந்தது.

அதேவேளை, வீரமுனை ஆண்டியடி சந்தியில் பெயர்ப்பலகை அமைத்தல் மற்றும் சுற்றுவட்டம் உள்ளிட்ட விடயங்களில் இனரீதியாக பாரபட்சம்

தொடர்ச்சியாக காட்டப்படுகிறது.

முதலில், சமுக செயற்பாட்டாளர் ராஜன் தன்னந்தனியாக சென்று, வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையின் தலைவர் எஸ்.பாஸ்கரனை அவரது பணிமனையில் சந்தித்து உரிய ஆவணங்களை கையளித்தார்.

அவர் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

பின்னர், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சுக்கு சென்று ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி.பி.கருணாரத்னவை சந்தித்து கல்முனை மாநகரசபை விடயம் தொடர்பில் முறையிட்டார். அவர் உரிய நடவடிக்கை எடுக்க இவ் வாரத்துள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவித்தார்.

இறுதியாக, ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று உரிய அதிகாரியிடம் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

மறுநாளே இம் முறைப்பாடு ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்று அங்கு அவர் உறுதியளித்தார்.

இதேபோல், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 29 கிராம் சேவை பிரிவுகளில் வரவேண்டிய அரசின் பிரஜா சக்தி வீடமைப்பு திட்டம் இங்குள்ளவர்களால் தடைபட்டிருக்கிறது.

காரைதீவில் வரவேற்பு வளையி அமைக்க தடை செய்தமை, கனகர் கிராமத்தில் மக்கள் குடியேறி மூன்று வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

சுகாதாரத்துறையில் நிலவும் பாரபட்சங்கள் அசமந்த போக்குகள். 

இவற்றையெல்லாம்  கண்ணுற்ற கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ,பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜன் உரிய அதிகாரிகளிடம் உரிய வேளையில் சுட்டிக்காட்டியிருந்தும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக அவர் கல்முனை போலீசிலும் முறைப்பாடு செய்துள்ளதோடு கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரிடமும் தெரிவித்துள்ளார்.

கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளரும், கல்முனை மாநகர சபை ஆணையாளருமே பெரும்பாலான சட்டவிரோத செயற்பாட்டுக்கு காரணமாகும்.அவர்கள் இந்த சட்ட விரோத செயற்பாட்டிற்கு  உடந்தையாக இருக்கிறார்களோ என சந்தேகம் உள்ளது என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.