கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு (SLAS Grade I) பதவி உயர்வு பெற்றுள்ளார்.


1999ஆம் ஆண்டு மாகாண எழுதுநர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அரச சேவையில் இணைந்த T.J. அதிசயராஜ், தனது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சியின் மூலம் படிப்படியாக அரச சேவையில் உயர்வுகளைப் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதிவிசேட தரத்திற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அச்சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம், 2014.06.02 அன்று இலங்கை நிர்வாக சேவையின் Grade III அதிகாரியாக நியமனம் பெற்றார். தொடர்ந்து 2020.06.02 அன்று Grade II-க்கு பதவி உயர்வு பெற்றார்.
அரச நிர்வாகத் துறையில் தனது நீண்டகால அனுபவத்தின் ஊடாக பிரதேச சபை செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை சிறப்பாக வகித்துள்ளார்.


தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வரும் வணிக நிர்வாக இளமானி T.J.அதிசயராஜ், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு (Grade I) பதவி உயர்வு பெற்றுள்ளமை அவரது அரச சேவைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.


ஒரு சாதாரண அரச சேவைப் பதவியில் இருந்து தனது கல்வி, திறமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி என்ற நிலைக்கு உயர்ந்துள்ள T.J. அதிசயராஜ் அவர்களின் சேவைப் பயணம், அரச சேவையில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக இளம் உத்தியோகத்தர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றது.



அரச சேவையில் இவரது அனுபவமும் ஆற்றலும் மேலும் பல மக்களுக்குப் பயனளிக்கவும், எதிர்காலப் பணிகளில் சிறப்பான சாதனைகளைப் படைக்கவும் இனிய நல்வாழ்த்துக்கள

அவரது நிர்வாகப் பணிகள் மேலும் சிறக்கவும், எதிர்காலப் பயணம் வெற்றிகரமாக அமையவும் வாழ்த்துகின்றோம்.