வீரவனிதையர் விருது பெற்ற மலையக மங்கை லோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

( வி.ரி.சகாதேவராஜா)

தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள்  நேற்று (7) சனிக்கிழமை வீர வனிதையர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

உலகறிந்த மனித உரிமை மற்றும் மகளிர் உரிமைகள் செயற்பாட்டாளரும், கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைமை இயக்குநருமான  திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் “வீர வனிதையர்”, விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அந்த விருதினை வழங்கி வைத்தார்.

மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசத்தின் துணைவியான இவர் இன்னோரன்ன சமூக மகளீர் அபிவிருத்தி செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கடந்த நாற்பது வருடங்களாக செயற்பட்டு வருகிறார்.

மகளிர் உரிமைகள் தொடர்பாக தனது  பயணத்தில் பல ஆக்கங்களையும் படைத்தவர் .

 பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கான தண்டனைகளும் அடங்கிய கையேடுகள்  பலவற்றை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். 

.

சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மது ஒழிப்பு, பெண்கள் உரிமைகள், தலைமைத்துவம், மனித உரிமைகள், நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் போன்ற தலைப்புக்களிலும் பரவலாக வளவாளராகவும் பல்துறைகளில் இலங்கை பூராகபங்காற்றி வருகிறார்.

 வேள்வி அமைப்பின் ஸ்தாபகரான இவர் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் சமூக சேவையாற்றியவராவார்.

பன்முக ஆளுமையுடையவர் அவர் பல வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்று  வழங்கியுமுள்ளார்.