கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. எனவே, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார கனிஷ்ட உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“வைத்தியசாலை கட்டமைப்பில் சீருடை தொடர்பான நடைமுறைகள் உள்ளன. ஆனால், குறித்த விவகாரம் தொடர்பில் இதுவரை சுகாதார அமைச்சுக்கு எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை.
நீண்டகாலத்திற்குப் பின்னர் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி, தகுதி மற்றும் புள்ளி அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 92,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் 1,900 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களில் சுமார் 1,860 பேர் இதுவரை நியமனங்களைப் பெற்றுள்ளனர். இன்னும் சுமார் 90,000 பேர் நியமனத்திற்காக வெளியில் உள்ளனர்.
எனவே, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
யாருக்கேனும் சீருடை அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் தொடர்பில் ஆட்சேபனைகள் அல்லது முறைப்பாடுகள் இருந்தால், அவற்றை சுகாதார அமைச்சுக்கு முறையாக அறிவிக்க முடியும். அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”** என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
