உலகத்தில் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று(11.12.2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் கையாள தற்போதைய நிலைமை, நிதி மற்றும் உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தசாப்தங்களின் பின்னர் இலங்கை முகம் கொடுத்த மிக மோசமான இயற்கை பேரழிவுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் இதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றங்கள் அடிக்கடி தீவிரமாகி வரும் நிலையில், தேசிய மற்றும் சர்வதேச தயார்நிலை வேகத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை.
இன்றைய நிலையில் சூறாவளிகள், திடீர் வெள்ளம் போன்றவற்றை நாம் அதிகமாகக் காண்கிறோம். எதிர்வரும் வருடங்களில் உலகம் இந்த பேரழிவுகளை அதிகமாக அனுபவிக்கும் என்பது தெளிவாகிறது. ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை.
வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிராந்திய நாடுகள் ஒரே நேரத்தில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதாலும், சூடான், காசா மற்றும் ஏமனில் பெரும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்வதாலும், சர்வதேச நிதியுதவிக்காக இலங்கை கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
ஒரே நேரத்தில் பல அவசர நிலைகளை சந்தித்த காலம் தனக்கு நினைவில் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். காலநிலைக்கு ஏற்ற மறுகட்டமைப்பு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்கான தேவையை ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.
பேரிடருக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பை விட முன்கூட்டியே முதலீடு செய்வது மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும் என்றார்.
tamilwin
