கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களின் கடல் வாய் முகத்துவாரங்கள் தோண்டித் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கல்முனையின நடராசா வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் யாவும் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் நிரம்பியுள்ள வடிகான்கள் துரிதமாக சீர்செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை கல்முனையையும் நாவிதன்வெளி, சவளக்கடை மற்றும் கொலனிப் பகுதிகளையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியில் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பரவியிருந்த ஆற்று வாழைகள் அகற்றப்பட்டு, அப்பாதை சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



