திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விகாரையின் விகாராதிபதி, திருகோணமலை கல்யான வம்ச திஸ்ஸ தேரர், இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

மனு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சிக்கலை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்வது பொருத்தமானது என்று நீதியரசர்கள் குறிப்பிட்டனர். 

அதன்படி, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று, குறித்த கட்டுமானம் குறித்துப் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளுக்கு அமைய பொருத்தமான முடிவை எடுப்பதற்கு, மனுதாரர் தரப்பு மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தனர். 

அதன்படி, குறித்த மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழு, அது தொடர்பான முன்னேற்றத்தை அன்றைய தினம் அறிவிக்குமாறும் உத்தரவிட்டது. 

இந்த நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் அமைதியைப் பாதுகாக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இரு தரப்பினருக்கும் அறிவித்தனர்.