இனவாதத் தீயை மூட்ட விடமாட்டோம்!” திருகோணமலை விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை ஒரு இனவாதப் பிரச்சினையாக மாற்ற முயல்வது, அரசியலில் தோல்வியடைந்த சக்திகளின் செயல்பாடு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (திங்கட்கிழமை) பாராளுமன்றத்திற்கு வருகை தந்த போது தெரிவித்தார்.

இனவெறி விளையாட்டுக் காலம் முடிந்துவிட்டதாகவும், இந்த நாட்டில் இனவாதத் தீயை மூட்ட யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

திருகோணமலை விவகாரம் குறித்துப் பேசிய ஜனாதிபதி, சிலையை அப்புறப்படுத்தியதற்கான காரணத்தை முதலில் தெளிவுபடுத்தினார்:

“திருகோணமலை புத்தர் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர், பாதுகாப்புச் சூழ்நிலைச் சீரடைந்தவுடன் அது மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.”

நீதிமன்ற வழக்கு மற்றும் இனவாதம்:

அந்த இடத்தில் உள்ள பிரச்சினை மதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், சட்டவிரோத நிர்மாணம் தொடர்பானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“அந்தக் காணியில் அமைந்த உணவகம் சட்டவிரோதமானது என்று கூறி ஏற்கனவே நீதிமன்ற வழக்கு உள்ளது. சமய ஸ்தலம் என்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை. இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.”

இவ்வாறானதொரு சூழலில் இனவாதத்தைத் தூண்டுவதைக் கடுமையாகச் சாடினார்.

“இதனை இனவாதமாக்க நான் இடமளிக்க மாட்டேன். இந்த நாட்டில் பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். யாரும் இனவாதத் தீயை மூட்ட விட மாட்டோம். ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செய்வதற்கு எதுவும் இல்லை.”

இனவாதிகள் இந்தச் சம்பவத்தை மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள் என்று கூறிய ஜனாதிபதி, கடுமையான எச்சரிக்கை விடுத்தார்:

“நீதிமன்ற வழக்கு உள்ளது. இனவாதிகள் தான் இதை பெரிதாகக் காட்டுகின்றார்கள். சின்ன வயது ஹனுமான் ஓடி ஓடித் தீயைப் பரப்பியது போல் தான் இங்கும் நடக்கின்றது. இனவெறியைப் பொறுத்துக் கொள்ள முடியாது, அந்த விளையாட்டு முடிந்துவிட்டது,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பான முழுமையான அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

thanks – ARV Loshan News