திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பாக கல்முனை சிவில் அமைப்புகளுடன் ஆணையாளர் கலந்துரையாடல்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை
வழமைபோல் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கல்முனை சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி கலந்துரையாடியுள்ளார்.
கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரும் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின் (KDMC) செயலாளருமான ஏ.எல்.ஏ. மஜீட் அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல்
கல்முனை மாநகர சபையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனையன்ஸ் போரம், மனித வள அபிவிருத்தி அமைப்பு (HRDO), கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபை (KDMC), கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல், கல்முனை நகர ஜும்ஆப் பள்ளிவாசல், அன்சார் சுன்னத்வல் முஹம்மதியா ஜும்ஆப் பள்ளிவாசல், ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற சவால்கள் குறித்து ஆணையாளர் தெளிவுபடுத்தினார்.
கல்முனை மாநகர சபையினால் அன்றாடம் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்று (Dumbing place) இல்லாதிருப்பதே தற்போதைய நெருக்கடி நிலைக்கு பிரதான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கடந்த சில காலமாக கல்முனை கிறீன் பீல்ட் பகுதி காணியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் கடந்த சில வாரங்களாக அங்கு குப்பைகளைக் கொட்ட முடியாதிருக்கிறது.
அதனால் அட்டாளைச்சேனை பள்ளக்காட்டுக்கு கொண்டு சென்றே குப்பைகளை கொட்ட வேண்டியுள்ளது. இது பாரிய சவாலான விடயம். தூரப் பிரச்சினை ஒரு புறம், யானை அச்சுறுத்தல் இன்னொரு புறம். யானைகள் படையெடுப்பதால் நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் அங்கு போக முடியாதுள்ளது.
இந்நிலையில் ஒரு திண்மக் கழிவகற்றல் வாகனமானது ஒரு தடவை மாத்திரமே அங்கு போய் வர முடியுமாக இருக்கிறது. அதன் பின்னர் அன்றைய நாளில் இன்னொரு தடவை குப்பைகளை சேகரித்து, அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனால்தான் நாளாந்தம் பெரும்பகுதி குப்பைகள் தேக்கமடைகின்றன.
ஆகையினால் அடிக்கடி எழுகின்ற இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கல்முனை மாநகர சபை எல்லையினுள் குப்பை கொட்டுவதற்கென பிரதேச ரீதியாகவேனும் பொருத்தமான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு, தயார்படுத்தப்பட வேண்டும்.
அதுவரை கிறீன் பீல்ட் பகுதி காணியிலேயே தற்காலிகமாக குப்பைகளை கொட்ட வேண்டியுள்ளது. தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்து, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு இதுவே உடனடித் தீர்வாகத் தென்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்களுடன் மேற்கொண்ட சமரச முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்தில் தீர்வு கோரப்பட்டபோது குறித்த இடத்தை வழமை போன்று பாவிக்குமாறும் அதுவொரு அத்தியாவசிய சேவை என்பதால் எவரும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டதாக ஆணையாளர் விபரித்தார்.
இந்த விடயத்தில் சம்மந்தப்பட்ட பொது மக்களை விழிப்புணர்வூட்டி, அவர்களது இணக்கத்துடன் குறித்த இடத்தில் சிறிது காலத்திற்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு சிவில் சமூக அமைப்புகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறித்த இடத்தில் குப்பை கொட்டுவதால் மக்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற உத்தரவாதத்தை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கல்முனை மாநகர திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் தற்காலிக தீர்வுகள் காண்பது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைத்ததுடன் இந்த விடயத்தில் மாநகர சபைக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
இதன் பிரகாரம் கிறீன் பீல்ட் மக்களுக்கு விடயத்தை தெளிவுபடுத்தி, அவர்களது இணக்கப்பாட்டுடன் அங்கு முன்னர் போன்று மீளவும் குப்பைகளை முறையாக கொட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் இக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.



