கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு.
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய மாகாண கண்காட்சியும் விற்பனையும் கடந்த இரு நாட்களாக (09,10) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி கூடத்தை திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம்.பைசால் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கே. இளங்குமுதன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன், மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் எம்.ஜி பிரியந்த, கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் எஸ்.ஈ ரெஜினோல்ட் எப்.எஸ்.சி உட்பட கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பயிற்சி நிலையங்களின் ஆசிரியர்கள், அதிகாரிகள் என பலரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் (09) ஆரம்பிக்கப்பட்ட இந்த மாகாண கண்காட்சியும் விற்பனையும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் என இரு நாட்களாக நடைபெற்று (10) மாலை நிறைவடைந்தது.
இறுதி நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டதுடன் மாதர் அபிவிருத்தி சங்கங்களின் உற்பத்திகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
இங்கு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களில் தையல், கைவினைப், மனையியல் பொருட்கள், கேக் அலங்காரம் மணப்பெண் அலங்கார காட்சிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் காட்சிக்கூடங்கள் என பல்வேறு உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனைகள் இடம்பெற்றன.
இதேவேளை மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களுக்கிடையில் உற்பத்தி மற்றும் தயாரிப்பு போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார் கள்.
மாவட்ட அடிப்படையில் அம்பாறை மாவட்டம் முதலிடத்தையும் இரண்டாம், மூன்றாம் இடங்களை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்கள் பெற்றுக் கொண்டன.
மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் நடைபெற்ற இக்கண்காட்சி இறுதி நாள் நிகழ்வுகளில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ், கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாஹிப், மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் பி.கோகுலராஜன், திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.பத்மராசா உட்பட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



















