தேசிய கராத்தே சாதனை மாணவர்களுக்கு ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்!
( வி.ரி.சகாதேவராஜா)
கல்வி அமைச்சின் தேசிய கராத்தே போட்டிகளில்
சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (18) வியாழக்கிழமை பெரும் வரவேற்புடன் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் ஜேஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 2025/09/12,13,14 ஆம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போட்டியில் ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் 03 தங்கம் – 02 வெள்ளி – 02 வெண்கலம் அடங்கலாக மொத்தம் – 07 பதக்கங்களைப் பெற்றிருந்தனர் .
இதில் Team Kata பங்கு பற்றிய எஸ்.கிவோன்ஷ்டன், கே.தரனிஷ்,எஸ்.நவக்சன் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், 16 வயது ஆண்களுக்கான Kata பிரிவில் எஸ்.கிவோன்ஷ்டன் தங்கப்பதக்கத்தையும் கே.தரனிஷ் வெண்கல பதக்கத்தினையும் 20 வயது பெண்களுக்கான Kata பிரிவில் ரி.நிதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும், 20 வயது ஆண்களுக்காக Kata மற்றும் Kumite பிரிவில் எஸ். நவக்சன் வெள்ளி, தங்கப் பதக்கத்தையும் Team kumite பிரிவில் கே.தரனிஷ், எஸ்.நவக்சன் ,கே.சஜந்தன் வெண்கல பதக்கத்தையும் பெற்றிருந்தார்கள்.
அத்துடன் 16, 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் Champion ஆக இராமகிருஷ்ண தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவன் எஸ்.நவக்ஷன் இவ்வருடத்திற்கான சிறந்த கராத்தே வீரனாக தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக இவ்வருடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் இப் பாடசாலை முதலாம் இடத்தினை சுவீகரித்து பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்கள்.










