அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் நினைவுகளுடன்,… கல்முனை நேற்று ஊடக வலையமைப்பு.
P.S.M
“நன்றி மறப்பது நன்றன்று” என்ற வாக்கிற்கு இணங்க அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் சேவையை சீர்தூக்கி நிற்கின்றது. கல்முனைநெற் ஊடக வலையமைப்பு.
யாழ்ப்பாணம் வடமாராட்சியில் 1971-04-14ல் பிறந்து, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற இடங்களில் தனது தன்னகரில்லா சேவையை பதித்தவர்.
இவரின் வாழ்விடம் மட்டக்களப்பு கல்லடி. இவரின் சேவைகள் பலவிதம்.
பலர் அறிந்த வைத்திய சத்திரசிகிச்சை நிபுணத்துவ சேவையை தாண்டி, ஒரு சிறந்த ஆசானாகவும் திகழ்ந்துள்ளார்.
உண்மையிலேயே எதற்கும் அஞ்சாத நெஞ்சம். கம்பீரமான நடை உடை பாவனை. இளமையிலேயே பல துடிப்பான செயலில் ஈடுபட்டிருந்த போதிலும், கல்வியிலும் தளராது கரை கண்டு, பல்கலைக்கழகம் சென்று, மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்று, வெளிநாட்டில் நிபுணத்துவ பயிற்சியும் பெற்றவர்.
பல்கலைக்கழகத்தில் கூட தன் வீர தீர செயலைக் கொண்டு பலரைத் தன் வசமாக்கியவர். ஓர் ஆணழகன் என்றும் சொல்லலாம். தனியாக உடற்பயிற்சி, அதற்கான உபகரங்களை கொண்டு செய்யும் இயல்பு இவ்வாறான விஷேட சிறப்பம்சங்களை கொண்டு வாழ்ந்தவர்.
சேவை என்ற விடயத்தில் நோயாளருடன் மிகக் கவனமாகவும், அன்பாகவும், தன் சுக துக்கங்களை களைந்து நோயாளிகளுக்கு என வாழ்ந்த ஓர் இதயம்.
சேவையாளரை கண்டித்து நோயாளர்களுக்கு சேவையை முடியுமான வரை பெற்றுக் கொடுத்து திருப்தி காண்பவர்.
விடுதிகளிலோ, பகுதிகளிலோ என்ன தேவை எனினும், தானாக முன்வந்து செலவை பொறுப்பேற்று நடத்தி முடிப்பதுடன் நற் பெயரும் பெற்ற பண்பாளர்.
சாய்சாலை பிரிவில் அனைத்து சேவையாளர்களுக்கும் தேநீருடன், தின்பண்டங்களும் வாங்கி வழங்கும் வள்ளல். மிகவும் துரித கதியில் இயங்கும் தனது பிரிவு ஊழியர்கள் மனச்சோர்வு அடையாமல் தனது செலவில் அனைவரையும் அழைத்துச் சென்று மகிழ்வித்து திரும்பும் ஒற்றுமைப்பண்பு கொண்டவர்.
அளவோடு கதை, தேவையானவற்றிக்கு மட்டும் உரை என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், நண்பர்களுடனும் அவருடன் இணைந்தவர்களுடனும் இணைந்து மிகவும் சுவாரஸ்யமாக கதைத்து வாய் விட்டு சிரிக்கும் சிரிப்பழகன். நோயாளிகளின் தேவைக்காக இரவு பகல் பாராது ஓய்வின்றி மிக சுறுசுறுப்பாக இயங்குமோர் சிறப்பு இயல்பு.
இவ்வாறு இவரின் பண்புகளை எடுத்துரைத்துக் கொண்டே செல்லலாம்.
இவர் 2025-09-13ல் இறைபதம் அடைந்தார்.
13 ஆம் தேதி இரவு முதல் இன்று வரை முகநூல் பக்கங்கள், செய்திகள், ஊடகங்கள் மூலம் தான் ஒரு சிறந்த சேவையாளர் என்பதை தடம் பதித்து மீளாத் துயில் கொண்டுள்ளார். அமரர் தங்கராஜா நிமலரஞ்சன்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப் பகுதியில் இவ் வைத்தியசாலையை சத்திர சிகிச்சைக்கான தேசிய விருது பெற அல்லும் பகலும் உழைத்தவர். இவரின் சேவையால் வைத்தியசாலை தேசிய விருது ஒன்றையும் பெற்றுக் கொண்டிருந்தது.
(இதற்காக அக்காலப் பகுதியில் வைத்திய அத்தியட்சகராக கடமை ஆற்றிய வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்கள் நிபுணத்துவத்திற்கு தேவையான சகல தேவைகளையும் குறைவின்றி நிறைவேற்றி கொடுத்திருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.)
சென்ற இடமெல்லாம் தனது திறமையையும், நிபுணத்துவத்தையும் மக்களுக்கு வழங்கிய ஓர் தெய்வம். பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு அவசர அறுவைச்சிகிச்சை செய்து மீளுயிர் கொடுத்தவர்.
ஆன்மீகத்திலும் ஒழுக்கம் பேணும் வகையில் ஆலயங்களில் வேட்டியுடன் பூசை நேரத்திற்கு முன்பாகவே வந்து ஆலயங்களின் அழகை ரசிப்பதுடன், ஆலய வளர்ச்சிகளிலும் அர்ப்பணிப்பும், அக்கறையும் காட்டும் இயல்பும் சிறப்பு.
மிக இள வயதிலேயே இறைவனின் பாதத்திற்கு மீளப் பெறப்பட்டுள்ளார் என்று தான் சொல்லலாம்.
செய்தி கேட்ட நேரமிருந்தே பல்லாயிரக்கணக்கானோர் சுய நினைவுக்கு வர தடுமாறினாகள். சமூக ஊடகங்கள், முகநூல் பக்கம் அனைத்துமே துயர் பகிர்ந்த வண்ணமே காணப்பட்டன.
பிறப்பை ஏற்ற உயிர்கள் யாவையுமே இறப்பை ஏற்றேயாக வேண்டும். இது இறை தீர்ப்பு. ஆனால் வாழ்நாளில் சேவை செய்து, பலரின் நன் மதிப்பை பெற்று பல்லாயிரக் கணக்காணோரின் துயரில் இறப்பது என்பது அனைவருக்கும் இலகுவாக கிடைத்துவிட முடியாத ஒன்று. அந்த வகையில் சேவையின் சின்னமாக எம்மை விட்டு பிரிந்து செல்லும் அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் இழப்பை ஏற்க முடியாமலும், ஏற்றே ஆக வேண்டிய நிலையிலும் உள்ளோம்.
எமது மன வேதனையில் நாம் எவ்வாறு மற்றவர்களை ஆறுதல் படுத்துவோம்!.
இருப்பினும் இழப்பால் துடிக்கும் பெற்ற தாய், இள வயதில் இணையை இழந்து தவிக்கும் தாரம், தந்தை பாசத்துக்காக துடிக்கும் பாலகன் மகன்,
இழப்பை தாங்க முடியாமல் துடிக்கும் உறவுகள், அனைவருக்கும் இறைவன் மன ஆறுதல் தரட்டும். உங்கள் சேவையால் இறையின் பாதத்தில் உங்கள் ஆத்மா சங்கமிக்கட்டும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
கல்முனைநெற் ஊடக வலையமைப்பு சார்பாக,