நாளை (11) மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய கும்பாபிஷேகம்
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மருதநில மகாராணி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயம் நாளை(11) வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) காண்கிறது.
இலங்கை நாட்டில் இருக்கிற ஒரேயொரு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருக்கும் ஒரேயோரு சுந்தரேஸ்வரர் ஆலயம் இதுவாகும்.
அம்பாறை மாவட்ட தமிழ் கூறும் மக்களின் கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டின் தனித்துவ அடையாளமாக விளங்கும், 500 வருடங்களுக்கு மேல் வரலாற்றை கொண்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த 06.04. 2022 இல் கோலாகலமாக நடைபெற்றது .

அன்று அதிகாலையில் இச்சிவன் ஆலயத்திற்கான அழகிய சிவலிங்கம் தமிழ் முறைப்படி பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. அன்று “மரகதம்”எனும் சிறப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மதம் என்பது மனிதனிடத்தில் ஏலவே இருக்கின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்தல் என்கிறார் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் .கடவுள், மதம் மற்றும் ஆன்மிக கருவூலங்களை கைவிடாமல் பிடித்துக் கொண்டிருப்பதால்தான் நம் நாடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார் அவர் .
ஆம், மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டதும் வன்னிமையின் சிற்றாட்சி நிலவிய பகுதியில் அமைந்ததுமான மீனாட்சியம்பாள் திருத்தலத்தின் மேற்கே காணப்படுவது இச் சிவன் ஆலயம்.
கிபி 14ஆம் நூற்றாண்டில் சிங்காரபுரியை ராஜதானியாக கொண்டு ஆட்சி செய்த வன்னிய ராஜசிங்கன் என்ற மன்னன் அமைத்தது மீனாட்சியம்மாள் ஆலயமாகும்.
அதேவேளை, அங்கு மேற்கே வயல்வெளி க்கு மத்தியில் இருக்கக்கூடிய புராதன சிவன் ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

சோழர் இலங்கையில் பொலநறுவையை மையமாகக் கொண்டு 52 ஆண்டுகள் ஆட்சி இந்த காலத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
பொலநறுவை ராஜ்யம் என்பது அனுராதபுர இராச்சியத்தை சோழர்கள் கைப்பற்றிய பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராஜ்ஜியம் ஆகும் .
கிபி 1017 கி.பி. 1236 காலகட்டத்திற்குரிய இக்காலத்தை முதலில் “மும்முடி சோழ மண்டலம்” என அழைக்கப்பட்டது.
இலங்கை நீர்வள நாகரீகத்தின் பொற்காலமாக அதனைக் குறிப்பிடலாம்.
ராஜேந்திர சோழன் இப்பகுதியை ஆட்சி செய்த பொழுது ஜனநாதபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
அவர்கள் 52 ஆண்டுகள் அங்கு ஆட்சி செய்தார்கள். இவர்களது காலத்தில் இலங்கையில் இந்து மதம் நன்றாக பரவியது எனலாம். பொலநறுவையில் உள்ள சிவன் கோயிலும் அதில் ஒன்று. அது இன்றும் இருக்கிறது.அதன் பின்னணியில் சோழர்களால் மடத்தடியில் சிவனாலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் 16ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இலங்கையை ஆக்கிரமித்த ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர்கள் கிறிஸ்தவ மதவெறி கொண்டு செயல்பட்டதனால் இந்து கோயில்களை அழித்துச் சேதமாக்கினர்.
அதற்குள் மண்டூர் முருகன் ஆலயம் திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் என்பனவும் அடங்கும் . அந்த அடிப்படையில் மடத்தடி சிவனாலயம் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது .
அதன் பின்னர் அவ் ஆலயம் தூர்ந்து காடு மண்டிக்கிடந்தது. அதைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் ராஜநாகம் குடிகொண்ட பாரிய புற்று இன்றும் உள்ளது. அன்றிருந்த சுனையுமுள்ளது.
அவ்வேளையில் மட்டக்களப்பு ஆதீன ஏற்பாட்டில் தமிழ் மந்திரங்கள் உச்சாடனத்துடன் அங்கு அழகிய சிவலிங்கம் ஒன்று அரோஹரா கோஷம் முழங்க கும்பாபிஷேகமன்று அதிகாலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்தப் பகுதியிலே சிவலிங்க வழிபாடு இடம் பெற்று வந்த காலை, அட்டப் பளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் அதனை சிவனாலயமாக கட்டியெழுப்ப வேண்டும் என்று எமது பரிபாலன சபையிடம் விடுத்த வேண்டுகோள் நாளை குடமுழுக்கு காண்கின்ற நிலைமைக்கு வந்திருக்கின்றது .
ஒரு பரிவாரக் கோயில் எவ்வாறு ஆகம முறைப்படி அமைய வேண்டுமோ அவ்வாறு மிகுந்த செலவிலே சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு சகல சிறப்புக்களையும் கொண்டு இந்த சிவனாலயம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது .
இந்த ஆலயத்துக்கு தேவையான களஞ்சிய அறை மின்சாரம் தண்ணீர் வசதி உள்ளிட்ட அத்தனை வசதிகளையும் அவர்களே தாமாக மனப்பூர்வமாக முன்வந்து செய்தமை இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது .
ஆலய முகப்பில் மேல் தளத்தில் ஆறு அடி உயர அழகிய சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது.சைவத்தைக் காத்த சமயகுரவர்கள் நால்வர் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ,மணிவாசகர் ஆகியோரது சிலைகள் அந்த மண்டபத்தில் உள்ளே நிறுவப்பட்டிருக்கின்மை மற்றும் ஓர் சிறப்பம்சமாகும்.
மத்தியிலே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது .பின்புறம் பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றது.
மொத்தத்திலே தென்றல் வீசுகின்ற மனோரம்யமான வயலும் வயல் சார்ந்த நெய்தல் நிலத்திலே சுற்றவர களனிகள் நிறைந்த பிரதேசத்தில் இவ் ஆலயம் நாளை குடமுழுக்கு காண்பது என்பது சிறப்பானதாகும் .ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில் மற்றும் ஆலோசகர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பரிபாலன சபையினரின் ஒத்துழைப்பில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆலோசனையில் கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நடைபெறுகின்ற சம காலத்திலே அதுவும் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, மீனாட்சி அம்பாள் சகிதம் தினமும் அங்கு திருவிழாக்கள் இடம் பெற்று வருகின்ற வேளையிலே, இங்கு சுந்தரேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் காண்பது உண்மையிலே சிறப்பானதாகும் .
அட்டப்பளத்தைச் சேர்ந்த பரோபகாரி ஆன்மீகச் செம்மல் திருமதி கமலாதேவி விவேகானந்தம் கொடுத்து வைத்தவர். வரலாற்றில் தனி முத்திரை பதிக்க அம்பாள் அவருக்கு அருள் புரிந்துள்ளார்.
அவரது புத்திரி திருமதி அகந்தினி எனது மாணவி. அவரது துணைவர் திரு.ரஞ்சன் ஆகியோரெல்லாம் பாக்கியம் செய்தவர்கள். அவர்கள்
இரவு பகல் பாராமல் இந்த பணியிலே முழுமூச்சாக நின்று செயற்பட்டதனால் இன்று அவ் அழகிய ஆலயம் குடமுழுக்கு காண்கிறது.
ஆலயத்தின் சமகால ஆலோசகர் என்ற வகையிலே அவர்கள் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு அத்தனை செயற்பாடுகளையும் கேட்டுக்கேட்டு கலந்துரையாடி செய்திருந்தார்கள்.
அவர்களுக்கு எம்பெருமானின் அருள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, இக் குடமுழுக்கு வைபவம் சீரும் சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா-JP.
( Rtd.ADE & senior Journalist)
Sp.trd(SC) , B.A, P.G.D.E(Merit) ,M.Ed..
கௌரவ ஆலோசகர்,
மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்.











