கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய அதிகாரங்கள் (காணி அதிகாரம் உள்ளடங்கலாக) கடந்த பல வருடங்களாக இனவாதிகளினால் திட்டமிட்ட வகையில் பறிக்கப்பட்டே வருகின்றது. பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுப்பதற்காக சனநாயக ரீதியாக எமது மக்கள் போராடிவரும் அதேவேளையில் நீதிமன்றம் ஊடாகவும் சட்டப் போராட்டம் உள்ளிட்ட பல வடிவங்களில் போராடிவருகின்றார்கள்.
அவ்வாறு மக்கள் தொடர்ந்து போராடிவரும் சூழலில் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மேலும் ஒரு அதிகாரத் பறித்தெடுக்கும் நகர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதாவது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தனியாக நடத்தப்பட வேண்டிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதற்கான திரைமறைவு முயற்சிகள் நடைபெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பினையும் பாரிய ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இச்செயற்பாட்டின் மூலம் கல்முனை வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் கல்முனை தெற்கு பிரிவில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் பகையை வளர்க்க தீவிரமாக அரசு முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரத்தியேகமாக நடாத்தப்பட வேண்டிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை அங்கு நடாத்தாமல் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்த முற்படுவதன் மூலம் தமிழ் பிரதேச செயலகத்திடமிருந்த அதிகாரத்தை வேண்டுமென்றே பறித்தெடுத்து கல்முனை தெற்கு பிரதேச செயலகம் தமிழரது நிலங்களையும் ஏனைய வாய்ப்புக்களையும் பறித்தெடுப்பதற்கான சதி நடந்து கொண்டிருக்கின்றது. இச் செயற்பாட்டிற்கு அனுரகுமார அரசாங்கமும் முழு அளவில் துணைபோகின்றதா என்ற சந்தேகம் வலுத்துவருகின்றது.
இச் செயற்பாட்டினை உடனடியாகத் தடுத்து நிறுத்த தமிழ் அரசியல் தரப்புக்கள் அனைத்தும் முயற்சிகளை செய்ய வேண்டும் எனக் வலியுறுத்துகின்றோம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று இருந்ததற்குரிய அடையாளங்கள் கூட இல்லாமல் அழிகப்படும்.
இப்பிரச்சினை தொடர்பாக திரு.கோடீஸ்வரன் அவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அவ்வப்போது பாராளுமன்றத்தில குரல் கொடுத்துள்ளார்கள்.
தேர்தல் காலங்களில் பேரம் பேசும் சக்தியை தமக்குத் தரவேண்டுமென மேடை மேடையாக மக்களிடம் கூறி அதிக ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெற்றிருந்தபோதும் கடந்த 10 மாதங்களாக தமிழ் மக்களது அதிக ஆணையைப் பெற்ற தரப்பு என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுவிலுள்ள 8 பேரும் கையொப்பமிட்டு எந்தக் கோரிக்கையையும் பிரதமருக்கோ அல்லது சனாதிபதிக்கோ முன்வைக்கவில்லை.
ஏன் இதுவரை அவர்கள் அதனைச் செய்யவில்லை. இது வரையில் கோடிஸ்வரன் அவர்கள் தனித்து குரல் எழுப்பி வருகின்றாரேயன்றி அக்கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டக இப்பிரச்சினை பற்றி எந்தச் செயற்பாட்டினையும் முன்னெடுத்திருக்கவில்லை. பேரம் பேசும் சக்திதியை தருமாறு தேர்தல் காலங்களில் மேடை மேடையாகப் பேசி ஓரே கட்சிக்கு அதிக ஆசனங்களைப் பெற்ற பின்னர் கூட்டாகக் குரல் கொடுக்காமல் தனித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே குரல் கொடுப்பதால் என்ன பயன் அம்மாவட்டத்தில் ஏனைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாய் கல்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரங்களை பறிப்பதற்கு துணைநிற்கும்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினரது குரல் எடுபடப்போவதில்லை. எனவே ஊடனடியாக தமிழரசுக் கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கெதிராக இணைந்து குரல் எழுப்ப வேண்டுமெனக் கோருகின்றோம்.
என்பிபி அரசாங்கத்தின் 1வது வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதில் வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு எந்த நிதி ஒதுக்கீடும் இல்லாத நிலையிலும் அதனை நீங்கள் எதிர்த்து வாக்களித்திருக்கவில்லை.
அவ்வாறாயின் அவ்வாறு எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலைவகிப்பதற்காக அரசுக்கும் உங்களுக்கும் இடையில் என்ன டீல் செய்யப்பட்டது. அவ்வாறு நடு நிலை வகித்ததன் மூலம் இந்த அரசுக்கு உங்களது ஆதரவை வெளிப்படுத்தி அரசு சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள நீங்கள் துணை நின்றுள்ளீர்கள். அவ்வாறிருக்க எமது பிரதேச செயலக அதிகாரம் எவ்வாறு பறிக்கப்படுகின்றது. நீங்கள் கூட்டாக இதற்குப் பதில் கூறியாக வேண்டும்.
தங்களை வடகிழக்கின் ஏக பிரதிநிதிகளாக தமிழரசுக்கட்சியினர் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள் 8 பேரும் ஒருமித்த நிலைப்பாட்டில் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் அத்தோடு இந்த விடயத்தை வலியுறுத்தி ஏனைய தமிழ் தரப்புகளையும் ஒன்று திரட்டி பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்யது பாராளுமன்றத்துக்கு வெளியில் ஒரு அடையாளப் போராட்டத்தில் ஒன்றையும் முன்னெடுக்க வேண்டும் இந்த சந்தர்ப்பத்திலேனும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்காக நீதியினை பெற்றுக் கொடுக்க முயல வேண்டும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்டம் அமைப்பாளர்
புஸ்பராஜ் . துஷானந்தன்