கடந்த 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இலங்கையின் தென்கிழக்கு பகுதியான அம்பாரை மாவட்ட சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் எதிர் கொண்ட சவால்களை அதன் பரிமாணங்களில் இருந்து ஆராய்கின்றது இக்கட்டுரை
- இலத்திரனியல் பிரயோகம் பற்றியும் அதனை எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவது என தெரியாத பிரதேச சபைக்கான பெண் வேட்பாளர்கள், அதனை எவ்வாறு எதிர்கொண்டனர், அவர்கள் சந்தித்த சவால்கள் பற்றியும் , வெற்றி வேட்பாளர்களை , இலத்திரனியல் பிரச்சாரங்கள் எவ்வாறு தீர்மானித்தது என்பது பற்றியும்.
- 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலிலே முதன் முதலாக பெண்களுக்கான கட்டாய இட ஒதுக்கீடானது (25 % ) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது இது இம்முறை நடைபெற்ற திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் எவ்வாறு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது (முன்னைய தேர்தலை விட பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்தமை பற்றியும்)
- 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் தாக்கம் , உள்ளூராட்சி தேர்தலில் பெண் வேட்பாளார் தெரிவில் தாக்கம் செலுத்தியதா ? என்பது பற்றியும் ஆராய்கிறது இக்கட்டுரை.
இலத்திரனியல் பிரயோகம் பற்றிய தெளிவின்மை….
பிரதேச சபைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, இலத்திரனியல் பிரயோகம் (Digital Literacy) பற்றிய பரீட்சியமின்மை அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை பெரிதும் பாதிக்கிறது. தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றத்துடன், சமூக ஊடகங்கள், இணைய விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் வாக்காளர்களை அணுகுவது முக்கியமாகிவிட்டது. இந்தத் துறையில் பெண்கள் பின்தங்கியிருப்பது அவர்களின் தேர்தல் வெற்றியை குறைக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
இலத்திரனியல் பிரயோகக் குறைபாட்டின் விளைவுகள்
1. சமூக ஊடகங்களில் பிரச்சாரக் குறைபாடு
இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் ஃபேஸ்புக் (முகநூல்), இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பெண் வேட்பாளர்களில் பலர் இந்தத் தளங்களை பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களை அணுகுவதில் சிரமப்படுகின்றனர்.
2. இலத்திரனியல் பாதுகாப்பு (Digital Security) மற்றும் தவறான தகவல் பயன்பாடு
இலத்திரனியல் அறிவு இல்லாததால், பெண் வேட்பாளர்கள் போலிச் செய்திகள் (Fake News), டிஜிட்டல் தாக்குதல் (Cyber Bulling ) மற்றும் நிகழ்நிலை அவதூறுகளுக்கு (Online harassments ) போன்றவற்றிற்கு, எளிதில் இலக்காகின்றனர். இது அவர்களின் பிரச்சார நம்பகத்தன்மையை வெகுவாக குறைத்திருந்தது.
3. மின்னணு வாக்குச் சாவடி (E-Voting) பற்றிய புரிதல் இன்மை
தற்போதைய பிரச்சார முறைகளில் இ-வோட்டிங், இ-நாணயம் (Digital Campaign Funds) போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்களைப் பற்றிய புரிதல் இல்லாத பெண் வேட்பாளர்கள், அவற்றை பயன்படுத்தி தங்கள் பிரச்சாரத்தை வலுப்படுத்த முடிவதில்லை.
4. நிகழ்நிலை நிதி திரட்டலில் பின்தங்கிய நிலை
இலத்திரனியல் இயங்குதளங்கள் மூலம் நிதி திரட்டுதல் (Crowd funding) இன்றியமையாததாகிவிட்டது , சில வேட்பாளார்கள் டயலொக் நிறுவனத்தின் EZ Cash மூலம் தேர்தல் பிரச்சார நிதிகளை சேகரித்து , தேர்தலை எதிர்கொண்டமை இங்கே குறிப்பிடத்தக்கது. பெண் வேட்பாளர்களுக்கு இத்தகைய திறமைகள் மற்றும் அனுபவம் இல்லாததால், அவர்கள் போட்டியாளர்களுடன் சமமாகப் போராட முடிவதில்லை.
இவற்றுக்கான தீர்வுகளை பெறும் பொருட்டு, கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்து சேவையாற்றிவரும் வல்லுனர் தே.மயூரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் பின்வருமாறு.
- பெண் வேட்பாளர்களுக்கான டிஜிட்டல் பயிற்சி முகாம்களை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுத்தல்
- சமூக ஊடக மேலாண்மை (Social Media Management), டிஜிட்டல் பாதுகாப்பு (Digital Security ) மற்றும் இ-தேர்தல் (E-Voting) தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளை பெற்றுக்கொடுத்தல்
- பெண் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.
- பெண்களுக்கான இலத்திரனியல் ஆலோசனை (Digital Mentorship) திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- நிகழ்நிலை பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்துதல்
- பெண் வேட்பாளர்களுக்கு எதிரான இலத்திரனியல் வன்முறை மற்றும் அவதூறுகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
போன்ற தீர்வுகளை முன்வைத்தார்.
பெண்களுக்கான கட்டாய இட ஒதுக்கீடானது (25 % ) ….
இம்முறை திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில், பாரம்பரிய அரசியல் கட்சிகளை முழுமையாக தோற்கடித்து, ஒரு சுயேட்சைக் குழு தனிப்பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது! இது மக்களின் பாரம்பரிய அரசியல் மீதான அலட்சியத்தையும், புதிய மாற்றத்திற்கான தாகத்தையும் வெளிப்படுத்துகிறது.
மேலும், இந்தத் தேர்தலில் ஒரு வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், ஒரு பிரபலமான பிராந்திய கட்சியின் அனைத்து போனஸ் (நிரப்பு) வேட்பாளர்களும் பெண்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்! இது பெண்களின் அரசியல் பங்களிப்பை வலியுறுத்துவதோடு, பாலின சமத்துவத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த வெற்றி, மக்கள் ஆதரவு மாற்றத்தின் அடையாளமாகவும், புதிய தலைமைக்கான தேவையாகவும் உள்ளது. பெண்கள் வேட்பாளர்களின் தேர்வு, ஆணாதிக்க அரசியலுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. இந்த மாற்றங்கள் உள்ளூர் ஆட்சியில் மேலும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கோவில் மக்களின் துணிச்சலான தேர்வு, இலங்கை அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் விபரம் -2025 | |
ஆண் | பெண் |
12 (75%) | 04 (25%) |
அரச வர்த்தமானி அறிவித்தல்…

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி….
2022 ஆம் ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது, இது அரசியல், சமூகம் மற்றும் தேர்தல் செயல்முறைகளை பெரிதும் பாதித்தது. குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தல்களில் பெண் வேட்பாளர்களின் பங்கேற்பு இந்த நெருக்கடியால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதார சீர்குலைவு, பாலின சமத்துவத்திற்கான முன்னேற்றங்களை தடைசெய்தது மற்றும் பெண்களின் அரசியல் போட்டியிடும் திறனை பலவீனப்படுத்தியது.
இது பெண் வேட்பாளர்களின் தேர்தல் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளை உருவாக்கியது:
- வேட்புமனு தாக்கல் செய்யும் முடிவு: விலைவாசி உயர்வு மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மை காரணமாக, பல திறமையான பெண்கள் ஆரம்பத்திலேயே தங்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் ஆர்வத்தை இழந்தனர். “இந்த நெருக்கடிக் காலத்தில் தேர்தலில் நிற்பதற்கான விலை மிகவும் அதிகம்” என்ற எண்ணம் பரவலாக இருந்தது.
- பிரச்சார நடத்தும் திறன்: வாகன எரிபொருள் பற்றாக்குறை, அச்சிடும் செலவுகளில் விண்வெளி வேகத்தில் ஏற்பட்ட விலை உயர்வு மற்றும் நிகழ்நிலை பிரச்சாரத்திற்கான செலவுகள் ஆகியவை பெண் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை கடுமையாக பாதித்தன. ஆண் வேட்பாளர்களை விட அவர்களுக்கு குறைவான நிதி பின்னணி இருந்ததால், இந்த அதிகரித்த செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை.
- வாக்காளர் மனநிலை: பொருளாதார துன்பத்தில் சிக்கிய வாக்காளர்கள், “பாலின சமத்துவம்” அல்லது “மகளிர் அதிகாரம்” போன்ற நீண்ட கால கருப்பொருள்களை விட உடனடி தீர்வுகள் மற்றும் பொருளாதார நிவாரணத்தை நோக்கியே தங்கள் கவனத்தைத் திருப்பினர். இது பெண் வேட்பாளர்களின் பாரம்பரியமாக வலுவான கருப்பொருள்களை பின்னணிக்கு தள்ளியது.
- அரசியல் கட்சிகளின் பங்கு: பொருளாதார நெருக்கடியால் கட்சிகள் தங்கள் வளங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் விளைவாக, “வெற்றி தரக்கூடிய” (பெரும்பாலும் ஆண்) வேட்பாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதும், பெண்களுக்கான கட்சி நிதி மற்றும் ஆதரவு குறைக்கப்படுவதும் நிகழ்ந்தது.
- பாலினப் பாகுபாடு காரணமாக, பெண்களுக்கு ஆண்களை விட வங்கி கடன் மற்றும் நிதி உதவிகள் கிடைப்பது கடினமாக இருந்தது.
- பொருளாதார நெருக்கடியின் போது, வறுமை, உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலைவாசி உயர்வு போன்றவற்றால் பொது மக்களின் முன்னுரிமைகள் மாறின. இதன் விளைவாக, பெண் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை விட குடும்பப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பெண் வேட்பாளர்களின் உள்ளூராட்சி தேர்தலும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பில் அவற்றிற்கான தீர்வு தொடர்பில் அண்மையில் சமூக சேவையில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்த ஜீவஜோதி அவர்களை தொடர்புகொண்ட கேட்டபோது அவரினால் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகள்….
- பொருளாதார ஆதரவு திட்டங்கள்
- பெண் வேட்பாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி மற்றும் கடன் வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
- பாலின சமத்துவ நிதி (Gender-Responsive Budgeting) அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
- பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான உத்தரவாதம்
- பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளை (harassment ) குறைப்பதற்கான கடுமையான சட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
- பாதுகாப்பான தேர்தல் சூழலை உருவாக்க அரசு மற்றும் தேர்தல் ஆணையங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2022 இலங்கை பொருளாதார நெருக்கடி, உள்ளூராட்சி தேர்தல்களில் பெண் வேட்பாளர்களின் பங்கேற்பை குறைத்தது , நிதி பற்றாக்குறை, பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் ஊடகங்களின் புறக்கணிப்பு போன்ற காரணிகள் இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. இருப்பினும், பொருளாதார ஈடுசெய்தல், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு மூலம் இந்த சவால்களை சமாளிக்க முடியும். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே, முழுமையான ஜனநாயகம் நிறைவேறும்.
–நி.பிரசாந்தன்–