(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், முஜீப் சத்தார், மு.அ.அ.அ. முஸ்அப்)
இலங்கையின் கிழக்கு மாகாண புராதன ஊர்களில் ஒன்றாக இருந்து வருகின்ற மருதமுனையின் வரலாற்றுப் பாரம்பரியத்தை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் “ஹெரிடேஜ் மருதமுனை” (HERITAGE MARUTHAMUNAI) எனும் இணையத்தள அங்குரார்ப்பண அறிமுக நிகழ்வு (17)மாலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
ஹெரிடேஜ் மருதமுனை எனும் இணையத்தளமானது மிகவும் தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தை கொண்ட மருதமுனையின் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், நூல்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் ஆளுமைகள் என ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற மருதமுனை மண்ணின் பாரம்பரிய புராதன தகவல்களை எல்லாம் உள்ளடக்கியதாக எல்லோராலும் இலகுவில் அணுகிப் பெறக்கூடிய வகையில் மருதமுனையின் பாரம்பரியமும் புராதனச் சிறப்புகளும், ஊரின் கலாசார மரபும் வருங்கால தலைமுறைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மூன்று கால கட்டங்களாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி றுடானி ஸாஹிரின் தலைமையில், ஹெரிடேஜ் மருதமுனை குழும உறுப்பினர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ் இணையத்தள
அங்குரார்ப்பண நிகழ்வின்போது, ஓய்வுநிலை யாழ்ப்பாண வடமாகாணத்திற்கான குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப் இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக திறந்து ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆவணத் தொகுப்பாளர்கள், ஊர் நலன்விரும்பிகள், மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் முன்வைத்தனர்






