“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது!

உணவு மருந்துகள் பரிசோதகர் என்.தேவநேசனின் தொகுப்பில் உருவான “சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரிவின் உணவு மருந்துகள் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன் தலைமையில் கல்லடி தனியார் விடுதியில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரம் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நூலினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.

அதிதிகள் வரவேற்பு, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஆசியரை, தலைமையுரை, நயவுரை, நூல் அறிமுகவுரை என்பன இடம் பெற்று நூலின் முதன்மைப் பிரதிகள் நூலாசிரியர் உள்ளிட்ட அதிதிகளினால் நூலின் முதன்மைப் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த தொழிலதிபர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இறுதியாக அதிதிகள் உரை மற்றும் நூலாசிரியரின் ஏற்புரையுடனான மகிழ்வுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்விற்கு கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட உதவிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி பீ.பற்குணன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஓய்வுநிலை வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.நவலோஜிதன் மற்றும் மட்டக்களப்பு தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வின் போது மாநகர முதல்வரின் சிறந்த சேவையினை பாராட்டி நிகழ்வின் ஏற்பாட்டாளர்களினாலும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சார்பிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.