இனி சாய்ந்தமருதில் இரவு நேர பொலீஸ் ரோந்து!
பொலீஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தெரிவிப்பு.
( வி.ரி.சகாதேவராஜா)
இனிமேல் சாய்ந்தமருது பிரதேசத்தில் குறிப்பாக கடற்கரை மற்றும் பிரதான வீதிகளில் இரவு நேர பொலீஸ் ரோந்து மேற்கொள்ளப்படும் என்று சாய்ந்தமருது பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் வர்த்தக சங்கத்தினரிடம் உறுதியளித்தார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக நலன்புரி சங்கத்தின் விசேட கூட்டம் (6)இரவு கல்முனை மையோன் பிளாஷா விடுதியில் இடம்பெற்றது .
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர், பிரபல தொழிலதிபர் எம். எஸ் .எம் .முபாரக் ஹாஜியார் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் டாக்டர் எம் ஐ .அமீர் புர்கான், சங்க செயலாளர் எம். எம். உஸ்மான் , பொருளாளர் எம் .எம். ஆசாத் ரஹீம் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
அங்கே தலைவர் முபாரக் கூறுகையில் “நேற்று இரவு சாய்ந்தமருதில் ஒரு வர்த்தக நிலையத்தில் திருட்டு இடம்பெற்றிருக்கின்றது .இதனை கண்டுபிடித்து வர்த்தகர்கள் நிம்மதியாக பாதுகாப்பாக வியாபாரம் செய்ய போலீசார் துரிதமாக நடவடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் .
அதற்குப் பதில் அளிக்கும் விதமாக சாய்ந்தமருது போலீஸ் பொறுப்பு அதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் மேற்கண்டவாறு இரவுநேர ரோந்து பற்றி கூறினார் .
அங்கு போலீஸ் பொறுப்பு அதிகாரி சம்சுதீன் மேலும் தெரிவிக்கையில்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் 28 ஆயிரத்துக்கு மேற்பட்டசனத்தொகை உள்ளது. ஆனால் எமது பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் உத்தியோகஸ்தர்கள் பற்றாக்குறை காரணமாக உரிய பாதுகாப்பை பூரணமாக வழங்க முடியாத சூழ் நிலை காணப்படுகிறது . எனினும் முடியுமானளவு பாதுகாப்பை வழங்குகின்றோம். உத்தியோகஷ்தர்களை விஸ்தரிப்பது அவசியம்.
இனிவரும் காலங்களில் பிரதான வீதிகளிலும் கடற்கரை வீதியிலும் இரவு நேரங்களில் பொலீஸ் ரோந்து போடுவதாகவும் கூறினார்.
அங்கு டாக்டர் அமீர் புர்கான் பேசுகையில்..
வர்த்தகர்கள் நேரத்திற்கு உணவெடுப்பது குறைவு. அது கூடாது.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். எனவே ஆரோக்கிய உணவு உரிய நேரத்திற்கு சாப்பிடல் வேண்டும். மேலும்
உடல் பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். உரிய நேரத்திற்கு உறக்கம் அவசியம். மேலும் உள்ளத்தை சந்தோசமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றார். வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் சுமார் 50 பேர் இரவு 9.30 மணி தொடக்கம் 12.00 மணிவரை இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.











