இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதுவரை அவரின் நான்கு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அண்மையில் கைதான  இனிய பாரதியின் சகா என கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு நேற்றையதினம்(29) குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த இடம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த யுத்த காலத்தில் மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இயங்கிய காலகட்டத்தில் இம்மயானத்தில் ஆயுதங்கள் உட்பட கடத்தப்பட்ட பலரும் சுடப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவற்றை உண்மைப்படுத்தும் விதமாக இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தம்பிலுவில் இந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது கருணாக் குழுவின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் இனியபாரதியின் கைதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்த கல்முனை அலுவலக பொறுப்பாளராக இருந்தவராக அறியப்படுகின்ற நபர் அழைத்துவரப்பட்டு குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tamilwin