மட்.ஆரையம்பதியில் பிராந்திய பாரிசவாத புனர்வாழ்வு மையம் (Regional stroke rehabilitation Centre) ஆரம்பிக்கப்பட்டது

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் கடந்த 28.06.2025 அன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த Dr. அசேல குணவர்தன (சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம்) இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மையத்தைத் திறந்து வைத்து உரையாற்றய போது,

பாரிசவாதத்தால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை சரிசெய்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் வகையில் நிபுணத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளான,

நரம்பியல் நிபுணத்துவ சேவை (Neurologist), மூட்டுவாத இயல் நிபுணத்துவ சேவை (Rheumatologist), உளநல வைத்திய நிபுணத்துவ சேவை (Psychiatrist), ஆயுர்வேத வைத்திய சேவை (Ayurvedic), உடற்திறன் சிகிச்சை சேவை (Physiotherapy), தொழில் நுட்ப சிகிச்சை சேவை (Occupational Therapy), மற்றும் பேச்சுத் திறன் சிகிச்சை சேவை (Speech Therapy) ஆகியவை இந்த மையத்தில் வழங்கப்படும்.

நோயாளிகள் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளையும், தொழில்சார் திறன்களையும் மீண்டும் பெறுவதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில் சிகிச்சைகள், அத்துடன் மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு உளநல ஆலோசனை போன்றவையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும்,

நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உணர்வுபூர்வமான மற்றும் சமூக ஆதரவு தளங்களை உருவாக்கி, அவர்களின் மீட்புப் பயணத்தை இலகுவாக்குவதும் இந்த மையத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

குறிப்பாக, இந்த மையத்தின் தனித்துவமான அம்சம், நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவச் சேவைகளையும் ஒருங்கிணைப்பதுதான் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. எஸ். குணராஜசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. அசேல குணவர்தன தலைமையிலான சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. சரவணபவன், பிராந்திய வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள், IMHO நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பல தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்த மையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனக் கருதப்படுகின்றது. IMHO நிறுவனத்தின் அனுசரணையில் கட்டிடம் புனரமைக்கப்பட்டு அவர்களின் அனுசரணையுடனே. தேவையான மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

உயர்தர புனர்வாழ்வு சேவைகளை உள்ளூரிலேயே வழங்குவதன் மூலம், நோயாளிகள் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்த்து, விரைவான மற்றும் பயனுள்ள சிகிச்சையைப் பெற முடியும். இது அவர்களின் மீட்சிக்கு ஊக்கமளித்து, சுதந்திரமான வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு சிகிச்சைகள் ஆரம்பகட்டமாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் வழங்கப்படும். பாரிசவாத புனர்வாழ்வு சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆரையம்பதி வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்வதன் மூலமோ அல்லது வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நேரடியாகச் நிலையத்திற்கு சமூகமளிப்பதன் மூலமோ இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.