-சௌவியதாசன்-
தாதியம் என்ற சொல்லுக்கு வைத்தியசாலையை பொறுத்தவரை இதய துடிப்பு என்று சொல்வார்கள். கல்முனை வடக்கு ஆதார வைத்திய
சாலை பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன்.
ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பானது எந்தளவுக்கு சரியானதும் நேர்த்தியானதாகவும், ஆரோக்கியமானதாகவும், இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு வைத்தியசாலையில் தாதியம் என்பது அவர்களது பணியும் மிக முக்கியத்துவம்வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது. தாதியம் என்ற சொல்லுக்கு வைத்தியசாலையை பொறுத்தவரை இதய துடிப்பு என்று சொல்வார்கள்.
அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புனர்வாழ்வு அமைப்பின்(ADVRO) ஏற்பாட்டில் உதவித் தாதிய பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (28.07.2025) குருக்கள்மடம் ADVRO முதியோர் இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் அவர்கள் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இது ஒரு தொழில் அல்ல தொழில் என்ற விடயத்தை தாண்டி சேவகம் என்ற விடயத்துக்குள் செல்கிறது. இதனை முன்னெடுக்க ஒரு வித்தியாசமான பண்பட்ட மனநிலை காணப்பட வேண்டும். எண்ணங்கள் சிந்தனைகள் இறையை நோக்கியதாக அமைய வேண்டும். நாங்கள் நடந்து வந்த பாதைகள் காண்பவை அனைத்தும் இதயத்துக்குள் பதியப்பட வேண்டும். எம்மைப் போலவே மற்றவர்களையும் பார்க்கும் சிந்தனை காணப்பட வேண்டும். தம்மைத் தாமே நேசிப்பவராலேயே மற்றவரையும் நேசிக்க முடியும். அந்த அடிப்படையில் நீங்கள் எல்லாம் பேறுபெற்றவர்கள். அந்த சந்தர்ப்பத்தை கொடுத்த ADVRO நிறுவனத்தின் செயல்பாடுகளையும் நான் பாராட்டுகின்றேன். இந்த உதவி தாதிய சான்றிதழானது ஒரு முதல் படியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றாக ஏறி சென்று வெற்றியடைய முயற்சி எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.