நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். 

றம்பொடை பகுதியில் இன்று காலை அரச பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் இதுவரை 21  பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள செய்தியில்,  

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அரசாங்கத்தின் இழப்பீடு

இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்தில் 78ற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அதில் தற்போது வரை 21பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.