ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது!
கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்
(வி.ரி.சகாதேவராஜா)
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகமாகும். ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது. அந்த வகையில் கல்முனை நெற் இணையத்தளமானது சமூகப் பொறுப்புடன் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு கல்முனை நெற் ஊடகத்தின் பத்தாவது ஆண்டு துவக்க விழாவில் அதிதியாகக்கலந்து கொண்டுரையாற்றிய கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை நெற் ஊடகவலையமைப்பின் ஏற்பாட்டில் மேற்படி விழா நேற்று (10) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவைத்தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் தம்பலவத்தை தென்னந்தோப்பில் நடைபெற்றது.
ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன், கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.குணபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக இயக்குனர் சபைக் கூட்டம் ஓய்வு நிலை அதிபர் கே.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. உலகறிந்த எழுத்தாளர் தமிழ்மணி உமாவயதராஜன் ,தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் க.குணராசா ஆகியோர் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தனர்.
கல்முனை நெற் ஊடகவலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் ஊடகவியலாளர் புவிநேசராசா கேதீஸ்ஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில்

டாக்டர் சுகுணன் மேலும் பேசுகையில்..
கல்முனை நெற் பத்து வருட வரலாற்றில் ஊடக தர்மம் மாறாது சமூக பொறுப்புடன் இயங்கி வருகிறது.
இடையில் ஊடகமையம் உதயமானது. அது ஊடகத்துறை பரிணாமவளர்ச்சியில் முக்கிய மைல்கல் எனலாம். ஊடகசுதந்திரம் நிலவுகின்ற அதேவேளை ஊடகதர்மமும் கடைப்பிடிக்கப்படவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சரியான தகவல்கள் பாரபட்சமின்றிச் செல்லும்.
ஊடகங்களுக்கு நக்கீரப்பார்வை வேண்டும்.கழுகுப்பார்வையும் வேண்டும். உண்மையை உலகுக்குக்கொண்டுவருவதில் ஊடகங்களுக்கு தனிப்பங்குண்டு.
கல்முனை வரலாற்றில் கல்முனைநெற் ஊடகத்திற்கென தனித்துவத்துடன்கூடிய தனிச்சிறப்புண்டு. மறைந்துகிடக்கின்ற சமுகம்சார் பல அநீதிகளை பாரபட்சஅம்சங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறது. அந்தவகையில் அதன் ஸ்தாபகர் கேதீஸ் மற்றும் உறுதுணையாயிருக்கின்ற சிரேஸ்டஊடகவியலாளர் ஜனாதிபதி ஊடகவிருதுபெற்ற சகா மற்றும் உமா வரதராஜன் குணராசா போன்ற ஊடகவியாளர்கள் மற்றும் நிருவாகக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
கல்முனைநெற் செய்திகளுக்கு அப்பால் சமுகசேவைகள் பலவற்றையும் செய்துகொண்டிருக்கிறது.

பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் பேசுகையில்..
.நாம் அன்று செய்திகளைப்பெற்ற முறைவேறு. இன்று தொழினுட்பம் நவீனமயப்படுத்தப்பட்டுவிட்டது.
வடக்கில் பிராந்திய பத்திரிகைகளுக்கு உள்ள மௌசு தனிரகம். ஆனால் துரதிஸ்டவசமாக கிழக்கில் இன்று பிராந்திய பத்திரிகை இல்லை. ஊடகங்கள் வளர்ந்த அளவிற்கு ஊடகவியலாளர்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை. ஊடகவியாளர்களிடையே ஒற்றுமை அவசியம். பிரிந்துநின்று எதனையும் சாதிக்கமுடியாது. எமது கல்முனை வைத்திய சாலை வரலாற்றில் கல்முனை நெற்றின் பங்களிப்பு ஒத்துழைப்பு அபரிமிதமானது. நன்றிகள் என்றார்.

கல்முனை வடக்கு பிரதேசசெயாளர் அதிசயராஜ் பேசுகையில்:
காலத்தின் அவசியதேவை கருதி கல்முனைநெற் ஊடகமையத்தையும் திறந்து மேலும் பரிமாணம் பத்திரிகையும் வெளியிட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்படும் எனநம்பலாம்.இதுமேலும் வளர வாழ்த்துக்கள் என்றார்.
பணிப்பாளர் ச.நவநீதன் பேசுகையில்:
உலகம் அவ்வப்போது இற்றைப்படுத்திக்கொண்டிருக்கிறது. தகவல்தொழினுட்பமும் அப்படியே. எனவே நாமும் அதற்கேற்ப மாறி ஒத்திசைந்துபோகவேண்டிய பொறுப்புள்ளது. என்றார்.
விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன், சமூக சேவகர் இரா.விஜயகுமாரன்( சுவிஸ்) மற்றும் ஊடகவியலாளர் என்.சௌவியதாசன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.











