இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியா வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்துள்ளமையானது, ரணில் விக்ரமசிங்க ஊடாக இந்தியா செயல்திட்டங்களை முன்னெடுக்க விரும்புகிறது என்பதை கோடிட்டு காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பயணம் இறுதிப்படுத்தப்படாத நிலையில், பயணத்துக்கான தயாரிப்புக்களில், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தீவிரமாக இருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்தியா, இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது முதலீட்டு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது.

மாகாணங்களுக்கான 21 திட்டங்கள்

இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆகிய அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 21 திட்டங்கள் இதுவரை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், கிராமப்புற சுகாதாரம், கலாச்சார பாரம்பரியம், மழைநீர் சேகரிப்பு, ஏழைகளுக்கான சமூக வீடுகள், விவசாயக் கிடங்குகள், சுற்றுலா மற்றும் சிவில் விமான உள்கட்டமைப்பு உதவிகள் இந்த திட்டங்களுக்குள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.