இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 52.94 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்கு அடுத்ததாக தென் மாகாணத்தில் 13,719 பேரும், மத்திய மாகாணத்தில் 8,476 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,945 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பில் 18,588 பேரும், கண்டியில் 6,786 பேரும், மாத்தறையில் 6,082 பேரும், களுத்துறையில் 6,059 பேரும், காலியில் 5,133 பேரும், இரத்தினபுரியில் 4,981 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதாந்தப் பதிவுகளைப் பார்க்கும்போது, ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் 29,964 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், நாட்டில் டெங்கு பரவல் தொடர்பில் மக்கள் அவதானமாகச் செயற்படுவதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றி, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்துகின்றனர்.