நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரச மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் மூத்த மருந்துக்கலவையாளர் பரமலிங்கம் சந்திரமோகன், தனது 60ஆவது வயதை பூர்த்தி செய்து, 09.07.2026 ஆம் திகதியுடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கல்வியை நிறைவு செய்து மருத்துவத் துறையில் இணைந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கான மருத்துவச் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். குறிப்பாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுமார் 26 ஆண்டுகள் மருந்துக்கலவையாளராக பணியாற்றி, தனது நேர்மை, பணிவு, கடமையுணர்வு மற்றும் மனிதநேயச் சேவையால் வைத்தியசாலை நிர்வாகம், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உயர்ந்த மதிப்பைப் பெற்றவர்.

1986ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான ஆரம்பப் பயிற்சியைத் தொடங்கிய இவர், 1987ஆம் ஆண்டு பொத்துவில் அரச வைத்தியசாலையில் மருந்துக் கலவையாளராக தனது அரசுப் பணியை ஆரம்பித்தார்.

1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, கோமாரி வைத்தியசாலை, திருக்கோவில் வைத்தியசாலை, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காரைதீவு மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து சுமார் பத்து ஆண்டுகள் சேவையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 1999ஆம் ஆண்டின் இறுதியில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியில் இணைந்த இவர், இன்று வரை இடையறாது 26 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வு பெறுகிறார். மொத்தமாக 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசுச் சேவையில், அதில் 26 ஆண்டுகளை ஒரே வைத்தியசாலையில் சிறப்பாக நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசுப் பணியைத் தாண்டியும் சமூகப் பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவரான சந்திரமோகன், மருத்துவ முகாம்கள், குறிப்பாக கதிர்காம பாதயாத்திரைக் காலங்களில் நடத்தப்படும் வைத்திய முகாம்களில் தன்னார்வத்துடன் பங்கேற்று மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளார்.
மேலும், கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியிலும், வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் அபிவிருத்தி மற்றும் ஆன்மீகப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தனது ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியை ஆலயத் தொண்டுகளுக்கும் சமூக நலப் பணிகளுக்கும் அர்ப்பணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக, இலக்கிய மற்றும் ஊடகத் துறைகளிலும் ஆர்வமிக்கவரான இவர், கல்முனை நெட் ஊடக வலையமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினராகவும், எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் திட்டமிடல் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
இலக்கிய ஆர்வமிக்க எழுத்தாளரான இவர், பல தெய்வீகப் பாடல்களை இயற்றி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இசைப் பாடல்களாக வெளியிட்டுள்ளார்.

இதனுடன் பல கவிதைகள் மற்றும் ஆன்மீகப் படைப்புகளையும் எழுதியுள்ளார். ஊடகத் துறையிலும் தனித்துவமான ஈடுபாடு கொண்டவர்.

இவரது குடும்பப் பின்னணியும் கல்வி மற்றும் அரசுச் சேவையில் சிறப்பிடம் பெற்றதாகும்.
இவரது தந்தையார் அமரர் பரமலிங்கம், பல்வேறு கல்வி நிலையங்களில் ஆசிரியராகவும் பின்னர் கல்முனை விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்முனை பிரதேசத்தில் கல்விப் பணிக்காக பலராலும் மதிக்கப்படும் கல்வியாளராக விளங்கியவர்.

இவரது தாயார் திருமதி செல்வநாயகி பரமலிங்கம், ஓய்வு பெற்ற அதிபராவார். காரைதீவில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி கற்பித்து, அவர்களை நல்லொழுக்கமிக்க குடிமக்களாக உருவாக்கிய பெருமைக்குரிய கல்வியாளர். இன்றளவும் முன்னாள் மாணவர்கள் அவரை நேரில் சந்தித்து கௌரவிப்பது அவரது கல்விச் சேவைக்கான சான்றாகும்.

இவரது குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு துறைகளில் உயர்ந்த நிலைகளை வகிக்கின்றனர். இரு சகோதரிகள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இரு சகோதரர்களில் ஒருவர் புகையிரத நிலைய அதிபராகவும், மற்றொருவர் மாகாண பிரதம பொறியியலாளராக (மாகாண பணிப்பாளர்) பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பெரியதம்பி ஜயந்தினி, வடகிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் நிதியமைச்சரான அமரர் கிருபாகரனின் சகோதரியாவார்.

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ஏழு ஆண்டுகள் இலண்டனில் பணியாற்றிய பின்னர் தற்போது காரைதீவில் தனியார் தொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மகள் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, சித்த வைத்தியராக அரச நியமனத்திற்காக காத்திருக்கிறார்.
இவ்வாறு கல்வி, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட குடும்பப் பின்னணியில் வாழ்ந்து, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ள பரமலிங்கம் சந்திரமோகன் அவர்கள், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது சமூகப் பணிகளும் ஆன்மீகத் தொண்டுகளும் தொடர்ந்தும் பலருக்கு பயனளிக்க வாழ்த்துகிறோம்.

அத்துடன், 10.07.2026 அன்று தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள சந்திரமோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் மேலும் பல சமூகப் பணிகளை மேற்கொள்ள இறைவனின் அருளும் ஆசீர்வாதமும் என்றும் கிடைக்க எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.