(மின்மினி மின்ஹா + ஜீ)

சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது கூட்டத்தொடரின் 13வது அமர்வு நேற்று (07) தவிசாளர்- கௌரவ. ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, உறுப்பினர் எஸ்.எம். சித்தி நிலோவ்பா (SLMC), உறுப்பினர் ரிஸ்விகான் முன்வைத்த இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கை நடத்தும் பிரேரணைக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த நான்காவது சபையின் காலப்பகுதியில் பெண்கள் வலுவூட்டல், வீதி அபிவிருத்தி, கொரிய மொழிப் பயிற்சி வகுப்புகள், பாலங்கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக நினைவூட்டினார்.

அத்துடன், கடந்த 10வது அமர்வில் தாம் முன்வைத்த பாடசாலைகளில் CCTV கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தும் பிரேரணை சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதற்காக தவிசாளருக்கு நன்றியும் தெரிவித்தார்.

அண்மையில் சம்மாந்துறை கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், பாடசாலைகளில் CCTV பொருத்தும் திட்டம் தொடர்பாக உரிய அமைச்சிடம் மீண்டும் பரிசீலனை கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரச நிதி கிடைக்காத பட்சத்தில், ஊரில் செயற்படும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் முன்மொழிந்தார்.

மேலும், பிரத்தியேக வகுப்புகள் நடைபெறும் இடங்களை சபை உத்தியோகத்தர்கள் கள ஆய்வு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த ஆய்வுகளில் சபை உறுப்பினர்களும் இணைந்து சென்று நேரடியாக பார்வையிடுவது வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்தும் என தெரிவித்தார்.