( வி.ரி.சகாதேவராஜா)

 சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தனா, கல்முனை ஆதார வைத்தியசாலையின்

 சிறந்த சேவை, தூய்மை மற்றும் டிஜிட்டல் செயல்முறை மேம்பாடுகளை நேரில் கண்டு, வியந்து பாராட்டினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர். அசேல குணவர்த்தனா நேற்று முன்தினம்(28) ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடும் நோக்கில், விஜயம் செய்த  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவை, வைத்தியசாலையின்  பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையிலான வைத்தியசாலை சமூகம் மாலை சூட்டி வரவேற்றது.

இவ் விஜயத்தின் போது, புதிய ஆய்வு கூடத்தை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

 இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் டிஜிட்டல் மைய வெளிநோயாளர் பிரிவைப் பார்வையிட்ட அவர், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் மற்றும் சமையலறை கழிவுகளஞ்சியம் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவு என்பு முறிவுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு விசேட பிரிவுகள் விடுதிகளை ஒரு மணிநேரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து சுகாதார சேவைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக முகாமைத்துவ குழுவினருடன்  விரிவாக கலந்துரையாடினார்.

 பின்னர் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில்,  வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பணிப்பாளர் நாயகம் விசேட உரையாற்றினார்.

அதன்போது, இன்றைய தரிசிப்பு பூரண திருப்தியளித்ததாகவும்,  ஒரு கணம் வியந்ததாகவும், டாக்டர் சுகுணன் தலைமையிலான வைத்தியசாலை சமுகத்தைப் பாராட்டுவதாகவும், வைத்தியசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் சுகாதார அமைச்சின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார். 

வைத்தியசாலை குழுவின் பிரதித்  தவிசாளர் வி.ரி.சகாதேவராஜா,  தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட நான்கு அம்ச குழுவின் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றி நன்றியுரையையுமாற்றினார்.

நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் பாராட்டும் வகையில், டாக்டர் அசேல குணவர்தனவிற்கு பணிப்பாளர் சுகுணன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

 தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட் நான்கு அம்ச குழுவின் கோரிக்கைகளடங்கிய வைத்தியசாலை குழுவின் மகஜரை குழுவின் தவிசாளர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் பிரதித் தவிசாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர்,  பணிப்பாளர் நாயகத்திடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர், திட்டமிடல் வைத்திய அதிகாரி மருத்துவர் வினோதினி,விசேட வைத்திய நிபுணர்கள், கணக்காளர் ,பிரதம தாதியர்,வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தவிசாளர் சந்திரசேகரம் ராஜன், பிரதித் தவிசாளர் வி.ரி.சகாதேவராஜா,பொருளாளர் இ.ரூபசாந்தன் மற்றும் வைத்தியசாலையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.