கடந்த 36 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது ஓர் அதிசய தெய்வீக நாய் சுப்ரமணியன்.
பாதயாத்திரை காவலனாக முருகசக்தி பெற்ற நாயாக திகழும் சுப்பிரமணி
நேற்று(2 7)சனிக்கிழமை 37 வது நாள் சுப்பிரமணி , முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவு மண்ணுக்கு வந்திருக்கின்றது.
இன்று உலகெங்கும் பேசுபோருளாக விளங்கும் அற்புதமான அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் just அதிகமாகின்றது.
பௌத்த பிக்குகளோடு வந்த “அலோக” என்ற நாய் எத்துணை வைரலானதோ, அதைவிட சுப்பிரமணியன் என்ற நாய் இன்று கூடுதல் வைரலாகி வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் இரண்டு கால்களில் வரும் பாதயாத்திரீகர்களை விட நான்கு கால்களில் வரும் சுப்ரமணியனை எதிர்பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.
இதனால் சுப்பிரமணியன் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகின்றான்.
ஒரு நாய் இத்தனை தூரம் அதுவும் தெரியாத பக்தர் கூட்டத்துடன் மரக்கறி உணவை உண்டு பயணிப்பது உண்மையிலேயே பார்ப்போரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான நிகழ்வுதான்.
செல்லுமிடமெல்லாம் எந்த ஒரு வேற்று நாயும் சுப்பிரமணியை சீண்டவில்லை. துரத்த வில்லை.
பாதயாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வைரவர் வருகிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.
அதுவும், யார் தன்னைத் தடவினாலும் சினங் கொள்ளாது சினேகபூர்வமாக பழகி வருகிறது.

எவ்வாறு இணைந்தார்?
சன்னதியில் பாதயாத்திரை ஆரம்பித்து 12 வது நாள் முல்லைத்தீவு தண்ணீரூற்றிலே ஒரு மாலைப் பொழுதில் இணைந்து கொண்டது சுப்பிரமணி.
சுப்பிரமணியை யாழ் மருதங்கேணியை சேர்ந்த கிளியன் சாமி எனும் அடியார் நீராட்டி உணவு கொடுத்து தோளில் சுமந்து பராமரித்து வருகின்றார் இன்று வரை .
தண்ணீரூற்றிலே இணைந்து கொண்ட சுப்பிரமணி இத்துணை உலகப் புகழ் பெறுவான் என்று யாரும் அப்போது எதிர்பார்க்கவில்லை.
ஒரு சாதாரண நாயாக இணைந்து கொண்டார்.
ஆனால் தொடர்ச்சியாக வந்ததனால் அவருக்கு குமுழமுனைக்கு முன்னால் உள்ள முறுக்கு பிள்ளையார் ஆலயத்திலே அவரை நீராட்டி பட்டு கட்டி பொட்டு வைத்து இணைத்து கொண்டார்கள் .
அதன் பின்னர் இணைந்து தொடர்ந்து வந்து கொண்டு இருந்தார்.
இந்த அணியிலே தொடர்ச்சியாக பயணிக்கும் புன்னாலைக்கட்டுவனைச்சேர்ந்த வரதராஜா வரன் சாமி கூறுகையில் .. திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் என்ற பகுதியிலே நாங்கள் வரும் போது சுப்பிரமணி சற்று களைப்படைந்து நடக்க முடியாமல் இருந்தது .அப்பொழுது அதனை இன்னும் ஒரு சாமியிடம் கொடுத்து மிருகவைத்தியரிடம் காட்டுமாறு கூறி நாங்கள் வந்து விட்டோம் .அவர்கள் மிருக வைத்தியரிடம் அதைக் காட்டி அங்குள்ள ஒரு அடியாரின் வீட்டிலே நாய் கூண்டிலேயே அவரை அடைத்து வைத்து பார்த்தார்கள்.
ஆனால் அதிசயம் என்னவென்றால் நாங்கள் அங்கிருந்து பயணித்து மூன்றாம் நாள் சல்லியம்மன் ஆற்றை கடந்து மறுகரைக்கு சென்ற பொழுது அங்கு சுப்பிரமணியன் வாலாட்டிக் கொண்டு நின்றது.
அனைவருக்கும் ஆச்சர்யம் அதிசயம்.
கூட்டிலே கிடந்த சுப்பிரமணி எவ்வாறு ஆற்றுக்கு அப்பால் வந்து சேர்ந்தது என்பது தெரியவில்லை. அதன் பின்பு அனைவரும் அதனை அன்போடு பயபக்தியோடு பார்த்தார்கள் . அனைவரும் இடையிடையே நீராட்டி அவருக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

யாத்திரீகர்களின் கருத்துக்கள்
பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல்சாமி கூறுகையில் ..
கல்லடி மிஷனிலே எமது ஆலோசகர் சகா சேர் இந்த சுப்பிரமணியை வீடியோ படம் எடுத்து உலகத்திற்கு காட்டிய பின்பு , இப்பொழுது எல்லாம் செல்லும் வழியில் எங்களையோ அல்லது வேலையோ யாரும் படம் பிடிக்கவில்லை வீடியோ காண்பதில்லை. அனைவரும் சுப்பிரமணியை தான் படம் பிடிக்கிறார்கள் அவரை எதிர் பார்த்து வழி நெடுகிலும் மக்களும் நின்று கொண்டிருக்கின்றார்கள். அதனை முருகக் கடவுளின் சித்தமாக நாங்கள் கருதுகின்றோம் என்றார்.
நாயை பராமரித்து வரும் மருதங்கேணி கிளியன் சாமி கூறுகையில்..
இது ஒரு தெய்வீக பிறவி .இவரை கதிர்காமம் வரை கொண்டு சென்று முருக பெருமானிடம் ஒப்படைத்து பின்பு இதனை நான் வீட்டுக்கு கொண்டு செல்ல சித்தம் ஆகி இருக்கின்றேன்.
இது சாதாரண வைரவர் அல்ல.சக்தி அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை மட்டும் நான் அறிவேன். என்றார்.
சபா சாமியார் கூறுகையில்..
யாத்திரையில் பல அற்புதங்களை முருகன் நடாத்துவதுண்டு.அதில் ஒன்றாகவே இதனைக் காண்கிறோம்.
வழிநெடுகிலும் அது நாங்கள் உண்ணுகின்ற பிரசாதம் மற்றும் மரக்கறி சாதத்தையே உண்டு வந்து கொண்டிருக்கின்றது.என்றார்.

தவசிலிங்கம் சுவாமி கூறுகையில்..
தெய்வீக சக்தி வாய்ந்த சுப்பிரமணி அநேகமாக கதிர்காமத்தில் மாயமாக மறைந்து போகலாம் என்று நம்புகிறேன் என்றார்.
யார் இந்த சுப்பிரமணியன்?
கதிர்காம பாதயாத்திரையில் “சுப்பிரமணியன்” என்ற நாய், பக்தர்களோடு இணைந்து சைவ உணவை மட்டுமே உட்கொண்டு, இத்தனை தூரம் பயணிப்பது உண்மையிலேயே பார்ப்போரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான நிகழ்வுதான்!
ஆன்மீக ரீதியாகவும், விலங்குகளின் நடத்தை ரீதியாகவும்
இந்து தர்மத்திலும், குறிப்பாக கதிர்காம வழிபாட்டிலும் விலங்குகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. முருகப்பெருமானின் வாகனம் மயில் மற்றும் சேவல் என்றாலும், வேடன் வடிவில் முருகன் காட்சியளிக்கும் போது அவரோடு வேட்டை நாய்களும் உடன் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
பக்தர்களின் “அரோகரா” முழக்கங்களுக்கு மத்தியில், எந்தவித பயமும் இன்றி, ஒரு வழிகாட்டி போல இந்த நாய் முன்னின்று நடப்பது இறைவனின் சித்தமாகவே பக்தர்களால் பார்க்கப்படுகிறது.
முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்றான “சுப்பிரமணியம்” என்ற பெயரையே இந்த நாய்க்கு சூட்டி, அதனை ஒரு சாதாரண விலங்காகப் பார்க்காமல், முருகனின் ஒரு தூதனாகவே பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கருதி அரவணைத்துச் செல்கின்றனர்.
மரக்கறி (சைவ) உணவு என்ற அதிசயம்
இயற்கையிலேயே நாய்கள் மாமிச உண்ணிகள் (Carnivores) அல்லது அனைத்துண்ணிகள் (Omnivores) ஆகும். ஆனால், இந்த நாய் 37 நாட்களாக முழுக்க முழுக்க சைவ உணவை (அன்னதான உணவுகள், பிஸ்கட், பால், ரொட்டி) மட்டுமே சாப்பிட்டு வருவதுதான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
பக்தி என்பது மனிதர்களுக்கு மாத்திரமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது” என்பதை இந்த “சுப்பிரமணியம்” நாய் உணர்த்துகிறது. காடுகளையும், கரடுமுரடான பாதைகளையும் கடந்து, கதிர்காமக் கந்தனின் சன்னதியை நோக்கிச் செல்லும் இந்த ஜீவனின் பக்தி, பாதயாத்திரை செல்லும் மற்ற பக்தர்களுக்கும் பெரும் ஊக்கத்தையும், ஆன்மீக பலத்தையும் கொடுத்து வருகிறது.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
ஆலோசகர். யாழ்.சந்நிதி- கதிர்காம பாதயாத்திரை குழு
