குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் முதன்மை பயணிகள் முனையக் கட்டிடத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் குவைத்திற்கும், குவைத்திலிருந்தும் இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தற்போது வானில் பயணித்துக் கொண்டிருந்த பல விமானங்கள் அருகிலுள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் குவைத் வான்பரப்பில் அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
