மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவின் (UKMTO) தகவல்படி, ஓமானின் வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலை ஈரானின் இரண்டு அதிவேகப் படகுகள் நெருங்கியுள்ளன.
எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அந்தப் படகுகளிலிருந்து கப்பலை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார். எனினும், கப்பலும் அதிலிருந்த ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தவிர, ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மேலும் இரண்டு வணிகக் கப்பல்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானியப் படைகளின் இந்தத் தாக்குதலால் கப்பல்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் துறைமுக முற்றுகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
24 மணிநேரத்திற்கும் குறைவான காலப்பகுதியே இந்த நீர்ப்பாதை திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
