இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்?
தெஹ்ரான் தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் “ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என எச்சரித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது திட்டமிட்டிருந்த ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை, தாக்குதல் நடைபெறவிருந்த நேரத்திற்கு முன்பாகவே, டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
“இன்று இரவு திட்டமிடப்பட்டிருந்த ஈரான் மீது தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. மேலும், ஹார்முஸ் நீரிணையை உடனடி, முழுமையான மற்றும் பாதுகாப்பான முறையில் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால், இரண்டு வாரங்களுக்கு எங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த தயாராக உள்ளேன்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்பின் அறிக்கைக்கு பின்னர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
“அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால், ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதப்படைகளும் தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்,” என அவர் கூறினார்.
மேலும், இரண்டு வார காலத்திற்கு, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டு, ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமே என்றும் அராக்சி தெரிவித்தார்.
அமெரிக்க தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டி கடைசி நேரத்தில் முயற்சி செய்த பாகிஸ்தானுக்கு அராக்சி நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டால், இந்த இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தம் மேலும் நீடிக்கக்கூடும் என்று ஈரானின் உயர் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

