அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி நிறைவுற்ற நிலையில் மத்தியகிழக்கு போர்பதற்றம் முழுமையாக நீங்காத நிலையில் உள்ளன.

வான்ஸின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தர், அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தர் பணியை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

“இரு தரப்பும் போர்நிறுத்தத்திற்கான தங்களின் அர்ப்பணிப்பைத் தொடர்வது முக்கியம்.” என்றும் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயற்சிக்கும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிட அமெரிக்க கடற்படை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் ஒரு நீண்ட பதிவில், “கூட்டம் நன்றாக நடந்தது, பெரும்பாலான விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் உண்மையில் முக்கியமான ஒரே விடயமான அணுசக்தி விடயம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு சட்டவிரோதக் கட்டணம் செலுத்திவிட்டு சர்வதேசக் கடற்பரப்பில் பயணிக்கும் எந்தவொரு கப்பலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும், ஈரானால் கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அமெரிக்கக் கடற்படை அகற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இது அமெரிக்காவை விட ஈரானுக்கே மோசமான செய்தி என்று கூறினார்.