( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை மாநகரில் மதகு மற்றும் ஒட்டுமொத்த வெள்ள நீர் வழிந்தோடும் வடிகானுக்கு மேலாக சட்டவிரோதமாக கடை அமைக்கும் வேலை சூட்சுமமாக இடம்பெற்று வந்திருக்கிறது.
அதனை கண்ணுற்ற கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ,பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜன் கல்முனை போலீசில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளரும், கல்முனை மாநகர சபை ஆணையாளருமே இந்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு காரணமாகும்.அவர்கள் இந்த சட்ட விரோத செயற்பாட்டிற்கு உடந்தையாக இருக்கிறார்களோ என சந்தேகம் உள்ளது என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரிடம் சமுக செயற்பாட்டாளர் ராஜன் முறையிட்டுள்ளார். அவர் நீதியாக நடந்து கொண்டார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை மற்றும் மாநகர சபைக்குச் சொந்தமான அரச காணியில் ஒரு கடைக்குரிய படியும் கொங்கிறீட்டும் இட்டு கடையொன்று சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருகிறது.
அதேவேளை சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரன் ராஜன், கல்முனை வீதி அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினார்.
அவர்கள் ” இதற்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை.என்று அவர்கள் சொன்னார்கள்.
மேலும் , வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் ஏலவே வீரமுனை பெயர்ப்பலகை அமைத்தல் மற்றும் சுற்றுவட்டம் உள்ளிட்ட விடயங்களில் இனரீதியாக பாரபட்சம் காட்டுகிறாரா என தமிழ் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கல்முனை மாநகருக்குள் சட்டவிரோதமாக கட்டுமான வேலைகள் நடக்கிறது என்றால் அது மாநகர சபை ஆணையாளருக்கு தெரியாதா? என்று ராஜன் கேள்வி எழுப்பினார்.
அங்கு கட்டுமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்களிடம் கேட்ட பொழுது இது எமது கிழக்கு மாகாண ஊராட்சி ஆணையாளரிடமும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் எமது பொஸ் அனுமதி பெற்று தான் நாங்கள் கட்டுகிறோம் என்று சொன்னார்கள் என்று சமூக செயற்பாட்டாளர் ராஜன் கூறுகிறார்.
இவை எல்லாம் போலீஸ் முறைப்பாட்டிலே சொல்லப்பட்டிருக்கின்றது .
இந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி வரைக்கும் செல்வேன் என்று திரு ராஜன் கூறினார்.







