கல்முனையில் இயந்திரப் படகுகள் சேதம்; ஒலுவில் துறைமுகம் மூடிக் கிடப்பதே காரணம் எனக் குற்றச்சாட்டு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றினால் கல்முனை கடற் பிராந்தியத்தில் பல இயந்திரப் படகுகள் சேதமடைந்திருப்பதாக மீனவர் சமூக பிரதிநிதியும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பிரதான இயக்குநருமான அஸ்வர் அப்துர் சலாம் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் துறைமுகம் செயற்பாடின்றி மூடிக் கிடப்பதே இந்த அவல நிலைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சனிக்கிழமை (15) சீரற்ற காலநிலை காரணமாக காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு, சாய்ந்தமருது பிரதேசத்தில் கரையொதுங்கிய படகு ஒன்று மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

காலத்திற்கு காலம்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படுகின்ற கடல் கொந்தளிப்பிலும் காற்றிலும் சிக்குண்டு பெறுமதியான இயந்திரப் படகுகள் சேதமடைந்து வருகின்றன. தற்போது காற்றில் அடித்து வரப்பட்டு, சேமடைந்துள்ள இந்த இயந்திரப் படகானது சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியானதாகும்.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 300 இயந்திரப் பட்டுகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றன. ஆனால் இவற்றை கடலில் பாதுகாப்பாக தரித்து வைப்பதற்கென ஒரு மீன்பிடித் துறைமுகமோ படகுத் தரிப்புத் துறையோ கிடையாது.

இதனாலேயே இந்த இயந்திரப் படகுகள் பாதுகாப்பற்ற முறையில் கடலில் அங்கும் இங்குமாக நங்கூரமிடப்பட்டு, நிறுத்தி வைக்கப்படுகின்றன.

ஒலுவில் துறைமுகம் கடந்த 10 வருடங்களாக மூடிக் கிடக்கின்றது. இதனால்தான் மீனவர் சமூகத்தினருக்கு இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரிய நஷ்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் படகு உரிமையாளர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.

ஆகையினால் எமது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, இப்பிராந்திய மீனவர் சமூகத்தின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு வழங்கி, அவர்களது கண்ணீர் துடைக்க முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்- என்றார்.